×

பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 பெண்கள் படுகாயம்-பொதுமக்கள் 2 இடங்களில் மறியல்

பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா, பெருங்கரை, அம்புரூஸ் வலைவு, உப்பட்டி, மேங்கொரேஞ் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அப்பகுதியில் உள்ள ஆடுகள், வளர்ப்பு நாய்கள், கோழிகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஏலமன்னா ஆதிவாசி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரிதா (29) என்ற பெண் இயற்கை உபாதை கழிக்க குடியிருப்பு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது முட்புதரில் மறைந்து இருந்த சிறுத்தை சரிதாவை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த அவர், சிறுத்தையிடமிருந்து தப்பித்து ஓடியபோது கீழே விழுந்ததில் மேலும் பலத்த காயமடைந்தார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுத்தையை விரட்டிவிட்டு பெண்ணை காப்பாற்றினர்.

இது குறித்து அறிந்த கவுன்சிலர் முரளிதரன் மற்றும் பிதர்காடு வனச்சரக வனவர் பெல்லிஸ் மற்றும் வனத்துறையினர் காயமடைந்த சரிதாவை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்கு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் துர்கா (65), வள்ளியம்மா (60) ஆகிய 2 பெண்கள் கூலிவேலைக்கு சென்றபோது சிறுத்தை தாக்கி படுகாயமடைந்தனர். அவர்களையும் சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டு துர்காவை ஊட்டி அரசு மருத்துவமனைக்கும், வள்ளியம்மாளை கூடலூர் அரசு மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேங்கொரேஞ் தனியார் தேயிலைத்தோட்டத்தில் பசுந்தேயிலை பரித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவரை தேயிலைத்தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று தாக்க முயன்றதால் தொழிலாளர்கள் அனைவரும் அச்சமடைந்து பசுந்தேயிலை பறிக்காமல் வெளியேறினர்.

ஒரே நாளில் 3 பெண்களை சிறுத்தை தாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் அல்லது சுட்டு கொள்ள வேண்டும் என்றும், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பந்தலூர் அருகே அம்புரூஸ் வலைவு மற்றும் ஏலமன்னா பகுதிகளில் எம்எல்ஏ பொன் ஜெயசீலன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டம் நீடித்ததால் பந்தலூரில் இருந்து கொளப்பள்ளி மற்றும் உப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கார் மற்றும் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் 4 இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பதாகவும், அதுவரை பள்ளி மாணவர்களை வாகனம் வைத்து பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து செல்வதாகவும், கோவையில் இருந்து கூடுதலாக வனப்பணியாளர்களை வரவழைத்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வனத்துறையின் உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். அப்போது முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடைகள் அடைப்பு

3 ெபண்களை சிறுத்தை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். கொளப்பள்ளி மற்றும் உப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

The post பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 பெண்கள் படுகாயம்-பொதுமக்கள் 2 இடங்களில் மறியல் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Pandalur ,Nilgiri district ,Elamanna ,Perungarai ,Amburuz Velavu ,Uppatti ,Mangorange ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை