×

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக் கோரி தூத்துக்குடி கே.வி.கே.நகரில் பொதுமக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி, டிச.22: குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக் கோரி தூத்துக்குடி கே.வி.கே.நகரில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை அமைச்சர் கீதாஜீவன் சமரசப்படுத்தினார். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். தூத்துக்குடி மாநகரில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து 3 நாட்களாகியும் இதுவரை மாநகர பகுதிகளில் பல இடங்களில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி கே.வி‌.கே.நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் வடியாது உள்ள மழைநீரை விரைந்து அகற்றகோரி அப்பகுதியின் அருகே உள்ள 4ம்கேட் செல்லும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சமரசப்படுத்தினார்.

தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின்போது பேசிய பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பல்வேறு உடைமைகளை இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, உடைமைகளை இழந்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து கே.வி.கே.நகர் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்த அமைச்சர் கீதாஜீவன், வெள்ளநீரை அகற்றுவதற்கான பணிகள் உடனே மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

The post குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக் கோரி தூத்துக்குடி கே.வி.கே.நகரில் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi KVK Nagar ,Thoothukudi ,Minister ,Geethajeevan ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது