×
Saravana Stores

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க 4 கண்காணிப்பு பொறியாளர்கள் நியமனம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சேதமடைந்த சாலைகளை சீரமைக்க 4 கண்காணிப்புப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடந்து வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். அதி கனமழையினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 50 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள், அரிசி, பருப்பு, கோதுமை, பால், பிஸ்கட், உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில், பாய் மற்றும் போர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

திருச்செந்தூர், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை செல்லும் சாலையில் மழைநீரால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பாதிப்பையும், சேதமடைந்த சாலைகளையும், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள சாலையை உடனடியாக சீர்செய்யுமாறு மற்றும் சாலைகளில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றுமாறும் அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டம், கடைகோடியில் இருக்க கூடிய ஸ்ரீவைகுண்டம் பகுதி மழைநீரால் சூழப்பட்டு, பல கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. அரசின் சார்பாக அமைச்சர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட 3 நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம்-புதுக்கோட்டை சாலையில் மழைநீர் வடிந்து இருந்ததால், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலை சீர்செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஆகிய இரண்டு ஒன்றியத்திற்கும் அதிகாரிகளையும் மற்றும் சாலைப் பணியாளர்ளையும் நியமித்து, நிவாரண முகாம்களில் சமையல் செய்யும் இடங்களுக்கு பொருட்கள் 2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய தினத்தில் இருந்து, காலையில் 20 பஞ்சாயத்துகள், மாலையில் 20 பஞ்சாயத்துகள் என்று பிரித்து, 20 அதிகாரிகளை நேரிடையாக நியமித்து உணவு மற்றும் அத்தியாசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பாக தயார் செய்து, 20 லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள், மாவட்ட இதர சாலைகள் போன்ற சாலைகளை செப்பனிட, நான்கு கண்காணிப்புப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும், நெடுஞ்சாலைத்துறை செயலாளரும் மற்றும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர், தலைமைப்பொறியாளர்கள் ஆகியோருடன் இணைந்து, பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

The post சேதமடைந்த சாலைகளை சீரமைக்க 4 கண்காணிப்பு பொறியாளர்கள் நியமனம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister AV Velu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கோவையில் ரூ.245 கோடியில் நூலகம்,...