×

திருநின்றவூர் நகர மன்ற கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆவடி: திருநின்றவூர் நகர மன்ற கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆவடியை அடுத்து திருநின்றவூர் நகராட்சியின் நகர மன்ற கூட்டம் நேற்று காலை 10 மணி அளவில், நகர மன்ற தலைவர் உஷா ராணி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி பொறுப்பு மாநகராட்சி கமிஷனர் சுரேந்திரா ஷா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், புதிய திட்டங்கள் இல்லை, வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் கூச்சல் குழப்பங்கள் நிலவியது.

இந்நிலையில், நேற்று நிறைவேற்றப்பட்ட 38 தீர்மானங்களில் பல தீர்மானங்கள் வார்டு உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருநின்றவூர் நகராட்சியை பொறுத்தவரை, பார்வையாளர்கள் மற்றும் நிருபர்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், கூட்டத்தில் விவாதிக்கப்படும், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து தொடர்ந்து பரம ரகசியம் காக்கப்படுகிறது.

மேலும், இது குறித்து நிருபர்கள் கமிஷனரிடம் கேள்வி எழுப்பினால், உங்களுக்கு அழைப்பு இல்லை என கூறி உதாசீனப்படுத்தி வருகிறார். மக்கள் பிரச்னைகளை விவாதிக்கும் கூட்டத்தை ரகசியமாக நடத்தி வரும், நகராட்சியின் செயல்பாடுகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை அதிகாரிகள் திருநின்றவூரில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கூறினர்.

The post திருநின்றவூர் நகர மன்ற கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruninnavur ,Avadi ,Aavadi ,council ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...