×

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்: தீர்ப்பாயத்தில் அரசு தரப்பு தகவல்

சென்னை: எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தீர்ப்பாயத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்தது. அது மழைநீருடன் கலந்து குடியிருப்புகளில் வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குபதிந்து விசாரணை செய்தது.

நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் விசாரித்தனர். 4 முறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று ஐந்தாவது முறையாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், எண்ணெய் நிறுவனங்கள் (சிபிசிஎல்), காட்டுக்குப்பம் மீனவர்கள் சார்பில் அனைத்து வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதிட்டனர். தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர் வாதிடுகையில், இதுவரை 393.7 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது. புலிகாட் ஏரி பகுதிகளில் ஆய்வு செய்ததில் தார் பந்து இல்லை, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் குறைந்த அளவில் தார் பந்து இருந்தது, அதையும் அகற்றிவிட்டோம்.

வனத்துறை ஆய்வில் எந்த ஒரு பறவையும் இறக்கவில்லை என அறியப்பட்டது. பாதிக்கப்பட்ட பறவைகளை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஐஐடி நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களது அறிக்கை விரைவில் கிடைக்கும். அவர்களுடன் கோவாவில் உள்ள தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனமும் ஆய்வு செய்து வருகிறது. இயல்பு நிலைக்கு மாற சிறிது காலம் ஆகும் என்றார். தமிழக அரசு மீன்வள துறை சார்பில், இந்த பேரிடருக்கு சிபிசிஎல்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. எண்ணெய் கழிவால் 2,301 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு குடும்பத்திற்கு ரூ.12,500 வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

இதில் ரூ.7,500 சிபிசிஎல் நிறுவனம் சார்பிலும், ரூ.5000 அரசு சார்பிலும் வழங்க இருக்கிறோம். மேலும் 787 படகுகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு படகிற்கு ரூ.10,000 வழங்க முடிவு செய்து உள்ளோம். சிபிசிஎல் நிறுவனம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை அதனால் ஏற்பட்ட விளைவுகள்தான் இது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிபிசிஎல் நிறுவனம் தரப்பில், மணலி தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளது, வடிகால் முறையாக பராமரிக்கவில்லை என பலமுறை அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அரசு அதனை கண்டுகொள்ளவில்லை, இதன் காரணமாக தான் வெள்ளம் ஏற்பட்டது. நீர்வளத்துறை முறையாக தகவல் தரவில்லை. எனவே நீர் வளத்துறை இதற்கு ஒரு முக்கிய காரணம். மணலி பகுதிகளில் உள்ள தொழிற்சாலை பழுது நீக்கும் கடைகளிலும் பாதுகாப்பு இல்லாமல் அதிக அளவில் எண்ணெய்களை சேகரித்து வைத்துள்ளனர். அதை ஆய்வு செய்ய வேண்டும். இந்த பாதிப்புக்காக இழப்பீடு வழங்குவதற்கு ரூ.8 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரம் செலவு ஏற்படுகிறது. அதில் ரூ.7 கோடியே 53 லட்சத்து 70 ஆயிரம் சிபிசிஎல் நிறுவனமும் மீதம் உள்ள 1 கோடியே 15 லட்சம் அரசு தரப்பில் வழங்க இருக்கிறது என்றனர்.

மீனவர்கள் தரப்பில், எண்ணெய் கழிவு கடலில் அதிக கிலோ மீட்டர் பரவி உள்ளது. மக்கள் வசிக்கும் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. 5 ஆண்டுகள் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சிபிசிஎல் நிறுவனம் இருக்கும் பகுதியில் தெற்கு நுழைவாயிலில் தற்போதும் எண்ணெய் வெளியேறுவதாக குற்றச்சாட்டு வைத்தனர். அனைத்து தரப்பு விவாதத்தை கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், நிலம் அமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்த பிறகே இவ்வளவு பெரிய நிறுவனம் கட்டப்பட்டது.

எனவே நீங்கள் தான் அதிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும், கட்டமைப்பை உறுதிபடுத்தி இருக்க வேண்டும். தவறு உங்களிடம் இருக்க, நீங்கள் எவ்வாறு நீர்வள துறையை குற்றம் சாட்ட முடியும். மென்குரோ காடுகளில் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை தனி அறிக்கையாக அரசு சமர்ப்பிக்க வேண்டும். மணலி தொழிற்சாலைகள் சங்கத்துடன் அரசு இணைந்து விரைவில் பணிகளை முடித்து அனைத்து தரப்பினரும் ஜனவரி 11ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

The post எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்: தீர்ப்பாயத்தில் அரசு தரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ennore estuary ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...