×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வெள்ளதடுப்பு சுவர் பணிகள் விறுவிறு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தினகரன் செய்தி எதிரொலியால் வெள்ளதடுப்பு சுவர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு மழை காலங்களில் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஆற்றின் கரையோரத்தில் உள்ள கலைஞர் நகர், கொய்யாதோப்பு, மேல் சிட்ரபாக்கம், கீழ் சிட்ரபாக்கம் போன்ற பகுதிகளில் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்து விடும். வீடுகளில் தண்ணீர் புகுவதால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வெள்ள தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அரசு ரூ.3.17 கோடி நிதி ஒதுக்கியது. இந்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கி சுமார் 1 கி.மீ தூரம் தடுப்பு சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. மேலும் ஆரணியாற்றின் கரையோரத்தில் வெள்ள தடுப்புசுவர் கட்டுவதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் இந்த பணிகள் இம்மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் வெள்ள தடுப்பு சுவர் பணிகள் மந்த கதியில் நடந்தது.

இதனால் பணிகள் நடைபெறாமல் கம்பிகள் துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டது. எனவே வெள்ள தடுப்பு சுவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ‘தினகரன்’ நாளிதழிலில் கடந்த 3ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் மழை காரணமாக கடந்த 5ம் தேதி ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கலைஞர் நகர், கொய்யாதோப்பு பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதுகுறித்தும் 6ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் வெள்ள தடுப்பு சுவர் கட்டுமானப்பணிகள் நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வெள்ளதடுப்பு சுவர் பணிகள் விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Oothukottai ,Oothukottai Municipal Corporation ,Dhinakaran ,Uthukkottai ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு