திருவள்ளூர்: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விடுபட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில், அனைத்து கிராமங்களிலும் ஜனவரி 15ம் தேதிவரை, வேளாண் சார்ந்த துறைகளின் மூலம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டமானது பிப்ரவரி 2019ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு, உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரத்தை மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் அரசால் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் தொடர்ந்து பயன்பெறுவதற்கு நில விவரங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை பி.எம்.கிசான் இணையதளத்தில் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், நிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள 4,663 விவசாயிகள் பி.எம்.கிசான் கவுரவ நிதி உதவிதொகை பெறுவதற்கு பதிவு செய்யாமல் நிலுவையில் இருப்பது தெரிய வருகிறது. எனவே தகுதியுள்ள ஏற்கனவே, இத்திட்டத்தில் இணைந்துள்ள மற்றும் விடுபட்ட விவசாயிகள் அனைவரும் முழுமையாக பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகின்ற ஜனவரி 15ம் தேதி வரை வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய துறைகளின் மூலம் சிறப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை கிராம அளவிலான செயல் அலுவலர்களாக நியமித்து உரிய இலக்குகள் வழங்கி வரும் ஜனவரி 15ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட கிராமங்களில் விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகள் அனைவரையும் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற 23ம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபா கூட்டங்களிலும் பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
எனவே இதுநாள் வரை பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு கிராம அளவிலான செயல் அலுவலர்களை அணுகி பி.எம்.கிசான் இணையதளத்தில் https://pmkisan.gov.in பதிவுசெய்யும் முறையை கேட்டறிந்து உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
மேலும், பி.எம்.கிசான் திட்ட தவணைத் தொகை பெறும் தகுதியுள்ள பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் இகேஒய்சி ஆகியவற்றை பி.எம்.கிசான் இணையதளத்தில் உறுதிசெய்யாமல் இருந்தால், அந்த பயனாளிகள் தங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் நேரடியாகவும் அல்லது கிராம செயல் அலுவலர்கள் மூலமாகவும் அல்லது பொதுசேவை மையங்களை அணுகியும் தங்களது விவரங்களை உறுதி செய்யலாம் என இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய ஜனவரி 15 வரை சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.