×

மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்; மக்களவையில் 100 எம்பிக்கள் அவுட்: கடைசி நாளில் அவைக்கு வந்தார் மோடி

புதுடெல்லி: மக்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மக்களவை நேற்று காலை கூடியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.கே.சுரேஷ், தீபக் பைஜ், நகுல்நாத் ஆகியோர் எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தின் போதும் இந்த அமளி மற்றும் கோஷம் நீடித்தது. கேள்வி நேரம் முடிந்த பிறகும் அமளி அடங்காததால் 3 எம்பிக்களை சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரித்தார்.

இருப்பினும் அவர்கள் அவையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் காங்கிரஸ் எம்பிக்கள் டி.கே.சுரேஷ், தீபக் பைஜ், நகுல்நாத் ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாக்கல் செய்தார். இதையடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் மட்டும் 97 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தனர். நேற்று 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அந்த எண்ணிக்கை 100ஆக உயர்ந்தது. மாநிலங்களவையில் 46 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இரு அவைகளிலும் சேர்த்து இந்ததொடரில் 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரின் முதல்நாளில் பிரதமர் மோடி அவைக்கு வந்தார். அதன்பின் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட போதும், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும் அவர் அவைக்கு வரவில்லை. கடைசி நாளான நேற்று அவர் சிறிது நேரம் அவைக்கு வந்தார். அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பிறகு சபாநாயகர் ஓம்பிர்லாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அவருடன் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

ஒரு நாள் முன்னதாகவே நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கியது. கேள்வி கேட்க லஞ்சம் பெற்றது தொடர்பான புகாரில் திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவி டிச.8ம் தேதி பறிக்கப்பட்டது. டிச.13ம் தேதி மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர் எம்பிக்கள் இருக்கும் பகுதியில் புகுந்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கேட்டு அமளி செய்த எம்பிக்கள் 100 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் இல்லாத நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதற்கான மூன்று முக்கிய மசோதாக்களை மக்களவை நிறைவேற்றியது. மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான மசோதாவுக்கும் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதை தொடர்ந்து இன்று முடிவடைய இருந்த குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாக நேற்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

The post மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்; மக்களவையில் 100 எம்பிக்கள் அவுட்: கடைசி நாளில் அவைக்கு வந்தார் மோடி appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Modi ,House ,New Delhi ,Lok ,Sabha ,Congress ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...