×

விதிமீறல் எதிரொலி; நாடாளுமன்ற பாதுகாப்பை சிஐஎஸ்எப்.பிடம் ஒப்படைக்க முடிவு: அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: மக்களவை பாதுகாப்பு விதிமீறலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை டெல்லி போலீசாரிடம் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் (சிஐஎஸ்எப்) ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. மக்களவையில் கடந்த 13ம் தேதி விதிகளை மீறி 2 பேர் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதன் பாதுகாப்பு குறித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்கு விரிவான பாதுகாப்பு வழங்கும் பணியை சிஐஎஸ்எப்.பிடம் ஒப்படைக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, நாடாளுமன்றத்தின் பழைய மற்றும் புதிய கட்டிடங்களுக்கு விமான நிலையங்களில் அளிப்பது போன்று சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதன் கீழ் எம்பி.க்களின் உடல் முழுவதும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படும். மேலும் அவர்களது ஷூக்கள், ஜாக்கெட்டுகள், பெல்ட் உள்ளிட்ட உடைமைகளும் எக்ஸ்-ரே கருவி கொண்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், “ஒன்றிய அமைச்சகங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிஐஎஸ்எப்.பின் அரசு கட்டிட பாதுகாப்பு பிரிவினர் (ஜிபிஎஸ்), தீயணைப்பு படையினர் மற்றும் அவற்றின் அதிகாரிகள், தற்போது நாடளுமன்ற வளாகத்துக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருடன் இணைந்து நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து இந்த வார இறுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு மற்றும் எம்பி.க்கள் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களுக்கு சிஐஎஸ்எப் மையத்தில் எம்பி.க்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது,” என்று கூறினார்கள். இதற்கு முன்பு, நாடாளுமன்ற வளாக பாதுகாப்பை டெல்லி போலீசார் கவனித்து வந்தனர்.

The post விதிமீறல் எதிரொலி; நாடாளுமன்ற பாதுகாப்பை சிஐஎஸ்எப்.பிடம் ஒப்படைக்க முடிவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Parliament ,CISF ,New Delhi ,Lok Sabha ,Delhi Police ,Central Industrial Security Force ,Dinakaran ,
× RELATED லாயக்கில்லாத எம்பிக்களை அனுப்பி...