×

சாரல் மழையுடன் பனிப்பொழிவும் சேர்ந்தது ‘ஊட்டி’யாக மாறிய திருச்சி

* குளிர்ந்த சூழலை ரசித்து அனுபவிக்கும் மக்கள்
* முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்

திருச்சி: திருச்சியில் இன்று சாரல் மழையுடன், பனிப்பொழிவும் இருந்தது. ஊட்டியில் இருப்பது போல் சீதோஷ்ண நிலை காணப்பட்டதால், மக்கள் அதை ரசித்து அனுபவித்தனர். லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வரும் 26ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருச்சியில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. இந்த மழை விடிய விடிய விட்டு விட்டு தூறியது. இன்று பகலிலும் சாரல் மழை நீடித்தது. அதோடு பனிப்பொழிவும் சேர்ந்து கொண்டது. இதனால், ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களில் நிலவும் குளிர்ந்த சூழல் திருச்சியிலும் நிலவியது. பெரும்பாலும் வெயிலிலேயே வதங்கி வந்த திருச்சி மக்களுக்கு இந்த வானிலை மாற்றம் மகிழ்ச்சியை கொடுத்தது.

குறிப்பாக வாகன ஓட்டிகள் உடல் முழுவதும் பரவிய குளிர்ச்சியை ரசித்த படி சென்றனர். திருச்சியில் இது போல் குளிர்ச்சியான சூழலை அனுபவித்து பல வருடங்களாகி விட்டது என்று பெருமைப்பட்டுக்கொண்டனர். அதோடு சாலைகள், வயல் வெளிகள் மற்றும் மலைக்கோட்டை உள்ளிட்ட மலை முகடுகளில் பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் பகல் 1 மணியளவில் கூட வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். புநநகர் பகுதிகளான லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது. டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, புதுகை, கரூர், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய மிதமான மழை பொழிந்தது.

The post சாரல் மழையுடன் பனிப்பொழிவும் சேர்ந்தது ‘ஊட்டி’யாக மாறிய திருச்சி appeared first on Dinakaran.

Tags : Trichchi ,Trishi ,Chirachi ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் நடிகர்...