×

நரிப்பையூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளியில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள், மாணவர்கள் அவதி


சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தில் வீடுகள், பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். மழைநீரை வெளியேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமம் உள்ளது. தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் தொடர்மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் மழைநீர் சூழ்ந்துள்ளது. இக்கிராமத்தின் அருகில் உள்ள மாணிக்க நகரையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனால், பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியமால் முடங்கியுள்ளனர். பாரம்பரிய மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் உள்ளனர். இந்நிலையில், நரிப்பையூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் செல்ல கால்வாய்களோ, ஓடைகளோ இல்லாததால் 2 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நரிப்பையூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளியில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள், மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Primary health center ,Naripaiur village ,Sayalkudi ,Naripaiur ,Dinakaran ,
× RELATED வட்டார மருத்துவ அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா