×

விபத்தில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சுரண்டை மாணவி காஞ்சனா உடல் அரசு மரியாதையுடன் தகனம்


சுரண்டை: சுரண்டையில் விபத்தில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த மாணவி காஞ்சனாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள் காஞ்சனா (21). இவர் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 18ம்தேதி காஞ்சனாவை அவரது உறவினர் கல்லூரி வாகனத்தில் ஏற்றி விட இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அப்போது வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காஞ்சனாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், காஞ்சனா மூளை சாவு அடைந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கோவை சென்றனர். உடல் உறுப்பு தானம் பற்றி மருத்துவர்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறினர். தனது மகள் இறந்துவிட்டாலும் அவரால் இரண்டு உயிர் பிழைக்கட்டும் எனக் கூறி உடல் உறுப்பு தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து காஞ்சனாவின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக பெறப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நபருக்கும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபருக்கும் அறுவைசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இதனால் இரண்டு பேர் மறுவாழ்வு பெற்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல் சொந்த ஊரான சுரண்டை வரகுணராமபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் வீ.கே.புதூர் தாசில்தார் அழகப்பராஜா, சுரண்டை வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலு ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். சுரண்டை ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மாணவி காஞ்சனா உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர்
சுரண்டை வரகுணராமபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை-செல்வி தம்பதியினருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து பிறந்தவர் காஞ்சனா. மகேஸ்வரன் என்ற ஒரு மகன் அடுத்து பிறந்துள்ளார். மகன் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டு குழந்தைகள் இருந்தாலும் பெற்றோர்கள் தனது மகள் காஞ்சனாவை மிகவும் செல்லமாக வளர்ந்துள்ளனர். திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து பிறந்ததால் மகளுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் பெயரையே காஞ்சனா என சூட்டியுள்ளனர்.

வறுமையிலும் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் மகளை படிக்க வைத்தனர். இந்த நிலையில் மகள் விபத்தில் மூளை சாவு அடைந்தது அவர்களை மட்டுமல்லாது அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. யாருடைய வாழ்க்கையிலும் இதுபோல் ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது. தனது மகள் இறந்தாலும் தனது மகளால் இரண்டு உயிர் எங்கோ வாழ்கிறது என்ற நம்பிக்கையில் தங்களது காலத்தை கழிப்பதாக பெற்றோர்கள் உருக்கத்துடன் கூறினார்கள்.

The post விபத்தில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சுரண்டை மாணவி காஞ்சனா உடல் அரசு மரியாதையுடன் தகனம் appeared first on Dinakaran.

Tags : Kanchana ,Surandai ,Kanjana ,
× RELATED சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி