×

புலியின் அச்சம் மாறுவதற்குள் சிற்றாறு சிலோன் காலனியில் செந்நாய் கூட்டம் அட்டகாசம்: ஆடுகளை கடித்துக் குதறியது


அருமனை: அருமனை அருகே உள்ள சிற்றாறு சிலோன் காலனியில் புகுந்த செந்நாய் கூட்டம் ஆடுகளை கடித்து குதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருமனை அருகே உள்ளது சிற்றாறு சிலோன் காலனி. இந்த பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்கள் அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இது தவிர வீடுகளில் ஆடு, மாடு, நாய், கோழி ஆகிய கால் நடைகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலோன் காலனி குடியிருப்பு பகுதியில் புலி ஒன்று அட்டகாசம் செய்தது. தினசரி அதிகாலையில் வரும் புலி ஆடு, மாடு, நாய்களை கடித்து குதறி வந்தன. இதனால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு வைத்து புலியை பிடித்தனர். அதன் பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். புலியின் அட்டகாசம் ஓய்ந்த நிலையில் தற்போது செந்நாய்கள் கூட்டம் காலனிக்குள் நடமாட தொடங்கி உள்ளது.

தினசரி அதி காலையில் பால் வெட்டும் தொழிலுக்கு செல்லும் பொதுமக்கள், மாலை 3 மணிக்கு மேல் அந்த பகுதியில் உள்ள காடுகளில் தங்களது வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடுகளை மேய்சலுக்காக விடுவது வழக்கம். அதேபோலத்தான் நேற்று அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி பத்மநாபன் தனதுக்கு சொந்தமான ஆடுகளை மதியம் சுமார் 3 மணிக்கு மேல் காட்டில் மேய்சலுக்கு விட்டு சென்று உள்ளார். இந்த நேரத்தில் 15க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டமாக வந்து மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்து குதறி இருக்கிறது. அப்போது ஒரு ஆட்டை மட்டும் கூட்டமாக சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்துள்ளது. இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சிவராஜன் என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே துரிதமாக செயல்பட்டு செந்தாய் கூட்டத்தை விரட்டி அடித்து உள்ளார்.

பின்னர் சென்று பார்த்த போது ஒரு ஆட்டை மட்டும் செந்நாய் கூட்டம் கடித்து குதறி இருந்தது தெரியவந்தது. அந்த ஆடு எலும்பாக கிடந்ததை பார்த்தவர் ஆட்டின் உரிமையாளர் பத்மநாபனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இந்த சம்பம் சிற்றாறு குடியிருப்புக்கும் ரேஞ்ச் ஆபீஸ் குடியிருப்புக்கும் மைய பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 கிமீ நடை பயணம்
சிற்றாறு பகுதி வரை பஸ்களில் வருகின்றவர்கள் சிலோன் காலனிக்கு வருவதற்கு சுமார் 2 மணிநேரம் நடந்து தான் வரவேண்டும். தற்போது செந்நாய் கூட்டம் வர தொடங்கி இருப்பதால் பள்ளிக்கூடத்துக்கு சென்று வருகின்ற சிறுவர்களை கடித்து விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் கவலையில் உள்ளனர். ஆகவே இது குறித்து வனத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறை விளக்கம்
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது: சிற்றாறு சிலோன் காலனியை சேர்ந்த மக்களிடம் ஆடு, மாடுகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்குமாறு ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தி உள்ளோம். அவர்கள் கண்டு கொள்வது இல்லை. செந்நாய்கள் ஆட்டை கடித்தால் முழுமையாக சாப்பிட்டு விடும். தற்போது அரைகுறையாகத்தான் குடித்து இருக்கிறது. ஆகவே இது செந்நாய் கூட்டம் தானா என்ற சந்தேகம் உள்ளது. இருப்பினும் கண்காணித்து வருகிறோம் என்றனர்.

The post புலியின் அச்சம் மாறுவதற்குள் சிற்றாறு சிலோன் காலனியில் செந்நாய் கூட்டம் அட்டகாசம்: ஆடுகளை கடித்துக் குதறியது appeared first on Dinakaran.

Tags : Chittaru Ceylon colony ,Arumanai ,Dinakaran ,
× RELATED அருமனை அருகே கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு