×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* ஃப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.

* முள்ளங்கி, காலிஃபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.

* அரைத்து விட்ட சாம்பார் செய்யும் போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.

* தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.

– பா.பரத், சிதம்பரம்.

* பருப்புப் பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் கொஞ்சம் கொள்ளை வறுத்துச் சேர்த்து விட்டால் வாயுப் பிரச்னை போய்விடும்.

* மழைக்காலத்தில் உப்பு போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில் நீர் கசியும். இரண்டு பச்சை மிளகாயை உப்பு பாத்திரத்தில் போட்டு வைத்தால் கசியாது.

* உலை கொதிக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டால், குழையாமல், பொலபொலவென்று சாதம் இருக்கும்.

– விசாலாட்சி கண்ணன், ஓசூர்.

* குழம்பை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கும்போது சிறிது வெந்தயத்தை வறுத்து பொடி செய்து போட்டால், குழம்பு அதீத மணமாக இருக்கும்.

* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை பழுக்காமல் இருக்கும்.

* சிறிது சர்க்கரை கலந்த நீரில் கீரையை ஊறவைத்து, பிறகு சமையல் செய்து சாப்பிட்டால் கீரை தனி ருசி தரும்.

* உளுந்து அரைக்கும் போது ஃபிரிட்ஜில் வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்தால் மாவு நன்றாக பொங்கி வரும்.

– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* ஊறவைத்த ஜவ்வரிசியுடன் புளித்த தயிர், அரிசி மாவு சிறிதளவு கலந்து துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடை தட்டினால் சுவையான வடை ரெடி.

* நன்கு ஊறவைத்த வெள்ளை காராமணியுடன் மிளகாய் தூள், உப்பு போட்டு அரைத்து வடை தட்ட, வித்தியாசமான வடை ரெடி.

* கீரை வடை செய்யும் போது கீரையை சுத்தம் செய்து சிறிதளவு எண்ணெ விட்டு அரை வேக்காடாக வதக்கி மாவில் கலந்து வடை தட்ட நன்கு ஜீரணமாகும்.

* தவலை வடை செய்யும்போது புழங்கல் அரிசி, பச்சரிசியுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து செய்ய ருசி கூடும். இதை தோசைக்கல்லிலும் எண்ணெயில்லாமல் தட்டலாம்.

– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

* கொழுக்கட்டைக்கு மேல் மாவு கிளறும் போது சிறிது பால் சேர்த்துக் கிளறி செய்தால் கொழுக்கட்டைகள் பிரிந்து விடாமலும் விண்டு போகாமலும் இருக்கும்.

* நறுக்கிய வாழைப் பூவை, வடித்த சூடான கஞ்சியில் போட்டு விட்டால் அதில் உள்ள பால் கஞ்சியில் கலந்து விடும். பிறகு பூவை சுத்தமாக அலசி எடுத்து சமைக்கலாம்.

* தேங்காயை ஃபிரிட்ஜில் வைத்து, பிறகு எடுத்து உடைத்தால் சுலபமாக, சமமாக உடைக்க முடியும்.

* வெளியூர் செல்லும் போது தோசை, ஊத்தப்பம் போன்ற வற்றின் மீது லேசாக தண்ணீர் தடவி, பிறகு பேக் செய்தால் அவை வறண்டு போகாமலும், சாஃப்ட்டாகவும் இருக்கும்.

– அமுதா அசோக்ராஜா, திருச்சி.

* கொத்தமல்லி விதைகளை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ள, வண்டு, பூச்சிகள் வராததுடன், அவசரத்துக்கு சட்டென சிறு நேரம் பொடித்தால் சமையலை விரைவாக முடித்திடலாம்.

* தோசை மாவை அரைத்ததும் உப்பு போட்டு ரொம்ப நேரம் கலக்காமல், தனித்தனி பாத்திரத்தில் தேவைக்கு எடுத்து வைக்க, முதல் நாள் மாவை நன்கு கலக்கி, அடுத்த நாளுக்கு உபயோகிக்க, மாவு அதிகம் புளிக்காததுடன், சுவையாக இருக்கும்.

* பச்சை மிளகாயை சுடுதண்ணீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து எடுத்துப் பயன்படுத்த காரம் குறைவதுடன், அல்சரும் வராது.

– மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

தேங்காய் சம்சா

தேவையானவை: மைதா மாவு – 250 கிராம், தேங்காய் – 1, பொட்டுக்கடலை – 50 கிராம், சர்க்கரை – 200 கிராம், கசகசா – 50 கிராம், எள் – 25 கிராம், நெய் – 25 கிராம், ஏலக்காய் – 5, சமையல் எண்ணெய் – 250 கிராம்.

செய்முறை: ஏலக்காயை பொடிக்கவும். தேங்காயை உடைத்து துருவிக் கொள்ளவும். எள், பொட்டுக்கடலை, கசகசா, தேங்காய் துருவல் இவைகளை தனித்தனியாக சிறிதளவு நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஏலக்காய் தூளைக் கலந்து வைக்கவும். மைதா மாவை தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, மாவை சிறிதளவு எடுத்து உருண்டையாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரிலோ அல்லது வாழையிலையிலோ எண்ணெய் தடவி அப்பளம் போல அகலமாக உருட்டி, அதன் நடுவில் தேங்காய் கலவையை இரண்டு தேக்கரண்டி அளவு வைத்து மடித்து, எண்ணெய் தடவி பூரி போல் தேய்த்து, தோசைக் கல்லில் எண்ணெய் தடவி போட்டு சிவந்ததும் மறுபுறம் புரட்டி, நன்றாக சிவந்த பின் எடுத்து விட்டால் சுவையான தேங்காய் சம்சா தயார். சூடான பாலில் இந்த சம்சாவை தொட்டு சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.

– எஸ்.பாவனா, திண்டுக்கல்.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கோடை விடுமுறைக்கு எங்கு போகலாம்?