×

பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை!

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்துச் சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து 2016ல் தீர்ப்பு அளித்தது. விழுப்புரம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேல்முறையீடு செய்தனர். வருமான வரி கணக்கு, சொத்து விவரங்களுடன், 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணைகளை முன்வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

பொன்முடியின் மனைவிக்கு சொந்தமான 110 ஏக்கர் விவசாய நிலத்தில் வரும் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக காட்டுவதாக அமைச்சர் பொன்முடி தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, வருமான வரிக்கணக்கு அடிப்படையில், அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சியை வழக்கில் இருந்து விடுதலை செய்தது தவறு என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வருமானத்திற்கு அதிகாக, சுமார் 64% சொத்துக்களை அமைச்சர் பொன்முடி சேர்த்து வைத்திருந்தது தவறு. லஞ்ச ஒழிப்புத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல் பொன்முடியும், அவரது மனைவியும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இருவரையும் விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

 

The post பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை! appeared first on Dinakaran.

Tags : Ponmudi ,Minister ,Rajakanappan ,Chennai ,Former ,Visalatchi ,Bonmudi ,Higher Education Department ,Rajakanapan ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...