×

தொடர் மழை முன்னெச்சரிக்கையாக குற்றால அருவிகளில் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி

தென்காசி, டிச. 21: குற்றாலம் அருவிகளில் நான்காவது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்தது. ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, குமரி தென்காசி பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது. இதனால் அருவிகளில் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக வெள்ளப்பெருக்கு சற்று கட்டுக்குள் வந்துள்ளது. இருந்த போதும் வானம் எப்பொழுதும் மேகமூட்டமாக காணப்படுவதாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரிக்கலாம் என்ற முன்னெச்சரிக்கையாலும் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நான்காவது நாளாக நேற்றும் நீடித்தது. மெயின் அருவியில் பாதுகாப்பு விளைவின் மீது தண்ணீர் விழுகிறது.

பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. எனவே இந்த இரண்டு அருவிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஐந்தருவியில் மட்டும் நேற்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது ஐயப்ப சீசன் காலமாக இருப்பதால் மெயின் அருவிக்கு வரும் ஐயப்பன் பக்தர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.‌ ஒரு சிலர் ஐந்தருவியில் சென்று குளிக்கின்றனர். வழக்கமாக ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவியில் குளிப்பது இல்லை. பயண நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக மெயின் அருவியில் குளித்துவிட்டு புறப்பட்டு விடுவர். ஆனால் தற்போது மெயின் அருவியில் நான்கு நாட்களாக தடை நீடிப்பதால் ஐந்தருவி நோக்கி செல்கின்றனர்.

The post தொடர் மழை முன்னெச்சரிக்கையாக குற்றால அருவிகளில் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Indaruvi ,Tenkasi ,Koortalam ,Aindaruvi ,Koortala ,Dinakaran ,
× RELATED பழைய குற்றாலம், மெயின் குற்றாலம்,...