×

மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்: அறநிலையத்துறை நடவடிக்கை

மதுராந்தகம், டிச.21: மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்ட ராமர் கோயில், வைணவ கோயில்களில் முக்கிய கோயிலாக வரலாற்றுச் சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. இக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் இக்கோயில், உத்தம சோழன் என்கிற மதுராந்தகச் சோழ மன்னரால் வேத விற்பன்னர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட இடமாகவும், சுகர், விபாகண்டர் போன்ற முனிவர்கள் தவம் புரிந்த புனித இடமாகவும் விளங்கியது.

இக்கோயில் உள்ள இந்த நகரம் வகுளரண்யம், ஸ்ரீரமாரங்கம், வைகுண்ட வர்த்தனம், ஏரிகாத்த ராமனூர் உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் மதுராந்தகத்துக்கு உண்டு. இலங்கையில் ராவணனை போர் புரிந்து சீதா தேவியை மீட்டு, ராமர் சீதையுடன் அயோத்திக்கு செல்லும்போது வழியில் மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (1795-98) அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கர்னல் பிளேஸ்துரை பொறுப்பில் இருந்தார். அப்போது, சில ஆண்டுகளாக மதுராந்தகம் பகுதியில் பெய்து வந்த பலத்த மழையால் வெள்ளம் அதிகமாகி எந்த நேரத்திலும் மதுராந்தகம் ஏரி உடையும் என்ற நிலை இருந்து வந்தது. இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர். அதற்கு இந்த கோயிலில் உள்ள தெய்வம் சக்தி படைத்ததாக இருந்தால் ஏரியை உடையாமல் காக்கட்டும்.

இக்கோயிலில் உள்ள ஜனகவல்லி தாயார் சந்நிதியை சீரமைத்து கோயிலின் மற்ற பகுதிகளை புனரமைத்துத் தருகிறேன் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார். எந்த நேரமும் ஏரிக்கரை உடைய நேரிடும் என்ற பதற்றமான நிலையின்போது பார்வையிட ஆட்சியர் பிளேஸ்துரை சென்றுள்ளார். அப்போது ராமபிரான், லட்சுமணனுடன் அலைமோதும் வெள்ளநீரால் ஏரிக்கரை உடையாமல் வில், அம்பு ஏந்தி காத்து நின்றதைக் கண்டார். ராமபிரான் இந்த ஏரி உடையாமல் ஊரைக்காத்ததால் இக்கோயிலுக்கு ஆட்சியர் நேரில் வந்து ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி ஜனகவல்லி தாயார் சந்நிதியை புதுப்பித்துக் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

மேலும், இந்த ஏரிகாத்த கோதண்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா செய்வதற்காக பாலாலயமும் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் முன்னிலையில் தொல்லியல் துறை வழிகாட்டுதல்படி பழமை மாறாமல் ராமர், தாயார், ஆண்டாள், ராமானுஜர், நரசிம்மர், வேதாந்த தேசிகர், சக்கரத்தாழ்வார், அனுமன் உள்ளிட்ட சன்னதியின் விமானங்களும், ராஜகோபரமும் புதுப்பிக்கும் பணி உபயதாரர்கள் நிதி உதவி உடன் நடைபெற்று வருகிறது. மேலும், கோயில் உள்பிரகாரங்களில் கற்கள் பதிக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்தப் பணியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோயிலில் திருப்பணி நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தடை நீங்கும்
விபாகண்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று சீதாதேவியுடன் ராமபிரான் கல்யாணக்கோலத்தில் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக ஐதீகம். இதனால், திருமணம் தடை உள்ளவர்கள் இக்கோயிலில் வந்து வழிபட்டால் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

பழமையான முறையில்:
சுண்ணாம்பு, கடுக்கா, மணல், வெள்ளம் ஆகியவை ஊறவைத்து இயந்திரத்தில் போட்டு அரைத்து பதப்படுத்தி சுண்ணாம்பு கலவையாக செய்து, அதன் மூலம் ராஜகோபுரம், விமானங்கள், சிலைகள் உள்ளிட்ட கட்டுமான பணி பழங்கால முறையில் நடைபெறுவது இக்கோயில் சிறப்பம்சமாக அமைய உள்ளது. இதற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மீண்டும் திமுக ஆட்சியில்…
மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்ட ராமர் கோயில் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது இந்து சமய அறநிலையத்துறை முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

The post மதுராந்தகத்தில் ஏரி காத்த கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்: அறநிலையத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kothandaram ,Mathuranthagam ,Madhurantagam ,Madurandakam lake Katha ,temple ,Hindu Religious Charities Department ,
× RELATED கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில்...