×

வெளிநாட்டுக்கு செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான புலம்பெயர்வோர் மசோதாவை சட்டமாக்க வேண்டும்: சென்னை கருத்தரங்கில் பொன்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி சார்பில் புலம்பெயரும் தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பான கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் என்.சுந்தராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது: கட்டுமான தொழிலாளர், வீட்டுப் பணியாளர், ஓட்டுநர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் நல்ல சம்பளம் என்ற நம்பிக்கையோடு வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்கின்றனர். முகவர், துணை முகவரால் போலியான வாக்குறுதி வழங்கப்பட்டு, டூரிஸ்ட் விசாவில் வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கின்றனர். அந்நாடுகளுக்கு சென்ற பின்னர் அவர்களுக்கு வேலையோ, உறுதியளிக்கப்பட்ட சம்பளமோ கிடைப்பதில்லை.

பல தொழிலாளர்களை ஒட்டகம் மேய்க்க நிர்ப்பந்திக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் வெளிநாடுகளுக்கு சென்ற தொழிலாளரின் பாஸ்போர்ட் அந்த நாட்டு முதலாளிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது. இவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிய அரசு புலம்பெயர்வோர் மசோதாவை ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாலும் அதை நிறைவேற்றி சட்டமாக்கவில்லை. எனவே புலம்பெயர்வோர் மசோதாவை சட்டமாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், சி.வி.கணேசன் மற்றும் கே.பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, விசிக துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, எம்எல்ஏக்கள் காரப்பாக்கம் கணபதி, ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா ஆகியோரும் பேசினர்.

The post வெளிநாட்டுக்கு செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான புலம்பெயர்வோர் மசோதாவை சட்டமாக்க வேண்டும்: சென்னை கருத்தரங்கில் பொன்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ponkumar ,Chennai ,Tamil Nadu Farmers-Workers Party ,General Secretary ,N. Sundaraj ,
× RELATED தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை...