×

தென் மாவட்டங்களில் மழை ஓய்ந்தது சென்னை – தூத்துக்குடிக்கு மீண்டும் விமான சேவை: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: தென் மாவட்டங்களில் மழை ஓய்ந்து, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதால் சென்னை – தூத்துக்குடி இடையே நேற்று முதல் விமான சேவை மீண்டும் தொடங்கியது. தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த அதீத கனமழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை – தூத்துக்குடி இடையே விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை சென்னை – தூத்துக்குடி – சென்னை இடையே விமானங்கள் இயக்கப்பட்டன. அதன்பின்பு சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற 2 விமானங்கள் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல், மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கின.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருந்ததால், கடந்த திங்கள், செவ்வாய் இரு தினங்களும், சென்னை – தூத்துக்குடி-சென்னை விமான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களுக்கு அவசரமாக செல்ல வேண்டியவர்கள், சென்னை – மதுரை அல்லது சென்னை-திருவனந்தபுரம் விமானங்களில் பயணித்தனர். மேலும் சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் சிறிய ரக ஏடிஆர் விமானங்களுக்கு பதிலாக, பெரிய ரக ஏர்பஸ் விமானங்களில் இயக்கப்பட்டு கூடுதல் பயணிகள் சென்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை ஓய்ந்து, வெள்ளம் வடியத் தொடங்கி இருப்பதால் நேற்று முதல் சென்னை – தூத்துக்குடி – சென்னை இடையே விமான சேவை மீண்டும் தொடங்கியது. அதன்படி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, முதல் விமானம் நேற்று காலை 5:45 மணிக்கு தூத்துக்குடி புறப்பட்டது. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து காலை 7:45 மணிக்கு புறப்பட்ட விமானம் காலை 9:20 மணிக்கு சென்னை வந்தது. இதைத் தொடர்ந்து காலை 10:15 மணி, பகல் 2:10 மணி விமானங்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post தென் மாவட்டங்களில் மழை ஓய்ந்தது சென்னை – தூத்துக்குடிக்கு மீண்டும் விமான சேவை: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai- ,Tuticorin ,Chennai ,Chennai - ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...