×

மின் கட்டண அபராத தொகையை தள்ளுபடி செய்த முதல்வருக்கு விசைத்தறியாளர்கள் நன்றி

பல்லடம், டிச.21:திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி, செயலாளர் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது: திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே, விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று கடந்த மார்ச் மாதம் விசைத்தறிகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டது. இந்நிலையில், மின் கட்டணத்தை குறைக்க கோரி விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்தனர். அதன்படி, 10.09.22. முதல் 01.03.23 வரை உள்ள மின் கட்டணத்திற்கு மின் வாரியம் அபராதம் விதித்தது. இதனை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து விசைத்தறியாளர்கள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்று அந்த அபராத கட்டணத்தை மின்வாரியத்திற்கு தமிழக அரசு செலுத்துவதாக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்திருந்தது. இதற்கு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் தற்போது ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்மூலம், விசைத்தறியாளர்களின் மின் கட்டண அபராத தொகை மற்றும் வட்டி ரூ.69 லட்சம் தள்ளுபடி செய்த தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு விசைத்தறியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post மின் கட்டண அபராத தொகையை தள்ளுபடி செய்த முதல்வருக்கு விசைத்தறியாளர்கள் நன்றி appeared first on Dinakaran.

Tags : Keyweavers ,Chief Minister ,Palladam ,Tirupur ,Coimbatore District Power Weavers Association ,President ,Velusamy ,Appukutty ,Balasubramaniam ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...