×

97 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 3 குற்றவியல் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்: வெளிப்படைத்தன்மை, நியாயத்தை அடிப்படையாக கொண்டதாக அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி: மக்களவையில் 97 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், முக்கியமான புதிய 3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த 3 சட்டங்களும் நீதி, வெளிப்படைத்தன்மை, நியாயத்தை அடிப்படையாக கொண்டதாக அமித்ஷா விளக்கம் அளித்தார். மக்களவையில் கடந்த 13ம் தேதி 2 வாலிபர்கள் கலர் புகை குண்டு வீசிய விவகாரம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென கடந்த 5 நாட்களாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடும் அழுத்தம் தந்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் அவையில் பதாகை ஏந்தி அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் 95 எம்பிக்களும், மாநிலங்களவையில் 46 எம்பிக்களும் என 141 எம்பிக்கள் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்களவை நேற்று காலை தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதில், பதாகை ஏந்தி வந்ததாக கேரள காங்கிரஸ் (மாணி) கட்சியின் தாமஸ் சாழிக்கடன், மார்க்சிஸ்டின் ஏ.எம்.ஆரிப் ஆகியோர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன் மூலம் மக்களவையில் சஸ்பெண்ட் எம்பிக்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்தது.

இதற்கிடையே, புதிய 3 குற்றவியல் மசோதாக்கள் மீதான விவாதம் 2வது நாளாக நேற்றும் நடந்தது. இதில் பேசிய சிரோமணி அகாலி தள எம்பி ஹர்சிம்ரத் பாதல், ‘‘புதிய குற்றவியல் சட்டத்தில் போலீசாருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற முக்கியமான மசோதாக்கள் நியாயமான, வெளிப்படையான முறையில் விவாதிக்கப்பட வேண்டும். இதில் அனைவரின் கருத்தையும் அறிவது அவசியம். ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இல்லாத சமயத்தில் இதுபோன்ற முக்கிய மசோதாவை நிறைவேற்றுவது சரியான முறையல்ல’’ என எதிர்ப்பு தெரிவித்தார்.

பல்வேறு பாஜ எம்பிக்கள் மசோதாவை வரவேற்று பேசிய நிலையில், இறுதியில் அமித்ஷா பதிலளித்து பேசியதாவது: புதிய 3 சட்டங்களும் தீவிரவாதம் என்பதற்கு தெளிவான வரையறையை கொண்டுள்ளன. தேசதுரோகம் ஒரு குற்றம் என்பது நீக்கப்பட்டு, ‘தேசத்திற்கு எதிரான குற்றங்கள்’ என்ற தலைப்பில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 3 மசோதாக்களும் விரிவான ஆலோசனைக்குப் பிறகே தயாரிக்கப்பட்டவை. சுமார் 158 கூட்டங்களை நடத்தி, இதில் கமா, புள்ளி முதற்கொண்டு ஒவ்வொன்றும் உன்னிப்பாக கவனித்து தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) ஆகியவை தண்டனை வழங்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளதே தவிர நீதியை நிலைநாட்டுவதாக இல்லை. மேலும், அவை காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கின்றன. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் மசோதாக்கள், இந்திய சிந்தனையின் அடிப்படையில், நீதி அமைப்பை நிறுவ முயல்கின்றன. இது காலனித்துவ மனநிலையிலிருந்தும், அதன் அடையாளத்திலிருந்தும் மக்களை விடுவிக்கும்.

முதல்முறையாக குற்றவியல் நீதி அமைப்புகள் மனித நேயத்துடன் இருக்கும். காலனித்துவ சட்டத்தில் முக்கியமில்லாத குற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. பழைய சட்டத்தில் பலாத்காரம் சட்டப்பிரிவு 375-376ல் இருந்தது. புதிய சட்டத்தில் இது 63வது பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. கொலை குற்றம் 302ல் இருந்து 101வது பிரிவாகவும், கடத்தல் 359ல் இருந்து 136வது பிரிவாகவும் மாற்றப்பட்டுள்ளது. கும்பல் கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கும்பல் கொலை பற்றி கேள்வி கேட்டார். அவர் பாஜவைப் பற்றியோ எனது மனநிலைப் பற்றியோ புரிந்து கொள்ள மாட்டார். உங்கள் ஆட்சியில் ஏன் கும்பல் கொலைக்கு தண்டனை விதிக்கவில்லை? ஒருவரின் மனநிலை இந்தியனாக இருந்தால், சட்டங்களை புரிந்து கொள்ள முடியும். இத்தாலியனாக இருந்தால் முடியாது.

3 மசோதாக்களும் அரசியலமைப்பின் உணர்வை பிரதிபலிக்கின்றன. ஆனால் இத்தாலிய மனநிலை கொண்டவர்கள் அதை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். புதிய 3 சட்டங்களும் நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை அடிப்படையாக கொண்டவை. இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷியா ஆகிய புதிய மசோதாக்கள் முறையே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவற்றுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* ஜந்தர்மந்தரில் இன்று போராட்டம்
நாடாளுமன்றத்தில் இருந்து 140க்கும் மேற்பட்ட எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் கண்டித்து, டெல்லி ஜந்தர்மந்தரில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், அங்கு மாதிரி நாடாளுமன்றம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று மதியம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டது. இப்போராட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

* சொன்னதை செய்கிறார் ஹேமமாலினி பாராட்டு
பாஜ எம்.பியும், நடிகையுமான ஹேமாமாலினி நேற்று மக்களவையில் பேசும்போது ஒரு இந்தி திரைப்பட வசனத்தை கூறி, ‘அமித்ஷா சொல்வதை செய்வார். சொல்லாத எதையும் அவர் கண்டிப்பாக செய்ய மாட்டார்’ என்றார்.

The post 97 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 3 குற்றவியல் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்: வெளிப்படைத்தன்மை, நியாயத்தை அடிப்படையாக கொண்டதாக அமித்ஷா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Amit Shah ,New Delhi ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்...