×

சவும்யா சர்கார் சதம் வீண்; தொடரை வென்றது நியூசிலாந்து

நெல்சன்: வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் டிஎல்எஸ் விதிப்படி 44 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நேற்று நெல்சனில் நடந்தது. டாஸ் வென்ற டாம் லாதம் தலைமையிலான நியூசி. பந்துவீசியது. வங்கதேச தொடக்க வீரர்களாக சவும்யா சர்கார், அனாமுல் ஹக் களமிறங்கினர். சர்கார் பொறுப்புடன் விளையாட, மறு முனையில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் வங்கதேசம் 80 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், சவும்யா சர்கார் – முஷ்பிகுர் ரகீம் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தது. ரகீம் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். 116 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் விளாசிய சர்கார், அதன் பிறகும் அதிரடியை தொடர வங்கதேச ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மிராஸ் 19, டன்ஸிம் ஹசன் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சர்கார் 169 ரன் (151 பந்து, 22 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். வங்கதேம் 49.5 ஓவரில் 291 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஷோரிஃபுல் இஸ்லாம் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. தரப்பில் ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ‘ரோர்கே தலா 3 விக்கெட் அள்ளினர். மில்னே, கிளார்க்சன், ஆதித்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசி. களமிறங்கியது. தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 33 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார்.

2வது விக்கெட்டுக்கு வில்லியம் யங் – ஹென்றி நிகோல்ஸ் ஜோடி 128 ரன் சேர்த்தது. வில் யங் 89 ரன் (94 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), நிகோல்ஸ் 95 ரன் (117 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். அதன் பிறகு இணை சேர்ந்த கேப்டன் டாம் லாதம், விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, நியூசி. 46.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 296 ரன் எடுத்து வென்றது. லாதம் 34 ரன் (32 பந்து, 4 பவுண்டரி), பிளெண்டெல் 24 ரன்னுடன் (20 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் ஹசன் முகமது 2 விக்கெட் எடுத்தார். ஆட்ட நாயகனாக சவுமியா சர்கார் தேர்வு செய்யப்பட்டார். நியூசி. 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நேப்பியரில் நடக்கிறது. இரு அணிகளும் 11 ஒருநாள் தொடரில் விளையாடியுள்ள நிலையில், நியூசி 9-2 என முன்னிலை வகிக்கிறது.

The post சவும்யா சர்கார் சதம் வீண்; தொடரை வென்றது நியூசிலாந்து appeared first on Dinakaran.

Tags : Savumya Sarkar ,New Zealand ,Nelson ,Bangladesh ,Dinakaran ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.