×

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா ஜேஎன் 1 உருமாற்றம்: பயம்…வேண்டாம், ஆனால்…எச்சரிக்கை அவசியம்

நாட்டில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் பரவத்தொடங்கி உள்ள நிலையில் ஒரே நாளில் தொற்று பாதித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உருமாறிய கொரோனா வைரசான ஜேஎன். 1 தொற்று பரவலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சுகாதார வசதிகள் தயார் நிலை குறித்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் நேற்று ஆய்வு செய்தார். கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மின்னல் வேகத்தில் பரவிய இந்த கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது. சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிர்கள் பலியாயின. கொரோனா வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளையும், ஆன்டிபாடிகளையும் அந்தந்த நாடுகள் தயாரிக்கத்தொடங்கின.

ஒட்டு மொத்த லாக்டவுன், கொரோனா தடுப்பூசி என தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முதல் அலை, இரண்டாவது அலை என எதிர்கொண்டு, சிறிது சிறிதாக தொற்று பரவல் குறைந்து உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தன. எனினும் கொரோனா தொற்றின் உருமாறிய திரிபுகள் அவ்வப்போது பரவத்தொடங்கி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தன. இந்த வரிசையில் தற்போது ஜேஎன்.1 புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் உருமாறிய கொரோனா திரிபான ஜேஎன் 1 வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் தெரிவித்துள்ளார். கோவாவில் 19 பேரும் கேரளா, மகாராஷ்டிராவில் தலா ஒருவர் என இந்தியாவில் மட்டும் 21 பேர் இந்த வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 2311 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதித்த கேரளாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் உருமாறிய திரிபு பரவலை தொடர்ந்து ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, யூனியன் பிரதேசங்கள், அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சர்கள், கூடுதல் தலைமை முதன்மை செயலாளர்கள், ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் இருந்து அனைத்து ஒத்துழைப்பையும் பெறும்.

கொரோனா தொற்று பரவலால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் பீதி அடைய தேவையில்லை. மருத்துவமனை தயார் நிலை, கண்காணிப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு செய்ய வேண்டும். மக்களுக்கு பயனுள்ள தகவல் தொடர்புகளை வழங்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவமனைகள் தயார் நிலை குறித்து ஆய்வை மேற்கொள்ள வேண்டும் . குளிர்காலத்தில் தொற்று பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். நமது தயார் நிலையில் எந்த தளர்வும் இருக்கக்கூடாது. சுகாதாரம் என்பது அரசியலுக்கான பகுதி இல்லை. சுகாதார அமைச்சகம் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிக்கும்” என்றார்.

2 வாரத்தில் 16 பேர் பலி

இந்தியாவில் ஜேஎன் 1 உருமாறிய ெகாரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கடந்த 2 வாரத்தில் மட்டும் 16 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். எனவே ஜேஎன் 1 உருமாறிய மரபணு வரிசையை கண்டுபிடிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உருமாறிய தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 90 சதவீதம் லேசான பாதிப்புதான் உள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இங்கு எழவில்லை. ஜேஎன்.1 (பிஏ.2.86.1.1) மாறுபாடு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

சார்ஸ்-கோவிட்-2ன் பிஏ.2.86 வரிசையின் வழித்தோன்றலாகும். இதற்கு முன்பு பாதிக்கப்பட்ட ஒமிக்ரான் வகையில் இருந்து பைலோஜெனட்டிக் ரீதியாக வேறுபட்டது. ஜேஎன்.1 மாறுபாடு இந்தியா தவிர அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஜேஎன் 1 தொற்று மற்ற வகைகளிலிருந்து வேறுபட்ட அறிகுறிகளை உருவாக்குகிறதா என்பது தற்போது தெரியவில்லை. அதே சமயம் ஜே.என்.1 தொற்றின் தீவிரம் அதிகரித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.

பீதி வேண்டாம்

புதிய கொரோனா மாறுபாடு வைரஸ் பரவுவதால் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இன்ப்ளூயன்ஸா வைரஸ்கள் உட்பட பெரும்பாலான சுவாச வைரஸ்களில் மாற்றம் நிகழும்போது, ​​​​ வைரஸ்கள் உருமாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, ஜேஎன் 1 கொரோனா மாறுபாடு என்பது சார்ஸ்-கோவி-2ன் துணை மாறுபாடுதான் என்பதால் ஒன்றும் ஆச்சரியமல்ல என்று மூத்த பொது சுகாதார நிபுணர் சந்திரகாந்த் லஹரியா தெரிவித்தார். இருப்பினும் குளிர்காலம் தொடங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்தியாவில், மக்கள் ஏற்கனவே ஓமிக்ரான் வகைகள் உட்பட பல்வேறு துணை வகைகளின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தது இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளை போட்டுள்ளதால் பெரிய பாதிப்பு வராது என்று அவர் தெரிவித்தார். ஐதராபாத் யசோதா மருத்துவமனையின் தொற்று நோய் ஆலோசகர் கார்த்திக் வெதுலா கூறுகையில்,’ஜேஎன்.1 என்பது பிஏ.2.86ன் புதிய துணைத்தொற்று. இது ஓமிக்ரான் மாறுபாட்டின் ஒரு பகுதி. முதன்முதலில் டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டது. இதனால் பெரிய பாதிப்பு இல்லை’ என்றார்.

The post மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா ஜேஎன் 1 உருமாற்றம்: பயம்…வேண்டாம், ஆனால்…எச்சரிக்கை அவசியம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி...