×

வால்பாறை அருகே இரண்டு வயதான குட்டி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி: வால்பாறை அருகே இரண்டு வயதான ஆண் குட்டியானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று பிற்பகல் ரோந்து பணியினை மேற்கொண்டனர். அப்போது பச்சமலை எஸ்டேட் பகுதியில் குட்டி யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் உத்தரவின் பேரில் உயிரிழந்த குட்டியானைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவர் குழு உயிரிழந்த குட்டியானைக்கு உடற்கூறு ஆய்வு செய்தது. ஆய்வில் உயிரிழந்த குட்டி யானை ஆண் யானை எனவும், அது சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க குட்டி எனவும் தெரியவந்தது. மேலும், குட்டி யானையின் உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக முடிவு வந்த பிறகு யானை குட்டியின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வால்பாறை அருகே இரண்டு வயதான குட்டி ஆண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Valparai ,Pollachi ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை