×

இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா; திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: 3 அடுக்கு பாதுகாப்பு


காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி கோயிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் சனி பெயர்ச்சி விழா இன்று மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனீஸ்வரர் இடம் பெயர்கிறார். இதையொட்டி நேற்றிரவு கோயில் வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் சனி பகவான் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இன்று காலை கோயில் பிரகாரத்தில் உற்சவர்களான சனி பகவான், தர்பாரண்யேஸ்வரர் புறப்பாடு நடந்தது. தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமி, ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை நடைபெறும் சனி பெயர்ச்சி விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை மற்றும் அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதனால் திருநள்ளாறு கோயில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் எளிதாக சென்று தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலையில் இருந்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் வசதிக்காக நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குளத்தில் 9 முறை மூழ்க வேண்டும்: இன்று திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று வலமாக சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும் நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை குளத்தில் மூழ்க வேண்டும். அதன்பிறகு பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் உள்ள புனிதநீரை தெளித்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து கோயிலில் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகனை வணங்கியதுடன் திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், தியாகேசரையும் வணங்க வேண்டும். பின்னர் பிராணேஸ்வரி அம்மனை வணங்கி விட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

The post இன்று மாலை சனிப்பெயர்ச்சி விழா; திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: 3 அடுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Shanipruchi ceremony ,Tirunallaar ,Karaikal ,Shani ,Bhagavan ,Tirunallaru ,Saturn ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...