×

சொத்து, பணத்தை அபகரிக்க திட்டமிட்டு நண்பர் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொடூர கொலை: 15 நாளில் அடுத்தடுத்து தீர்த்துக்கட்டிய வாலிபர், தாய், தம்பிகள் கைது

திருமலை: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் மக்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பூனாபிரசாத் (36), தொழிலாளி. இவரது மனைவி சாத்விகா (29). இவர்களது இரட்டை குழந்தைகள் சைது (7), சைத்ரி (7). பூனாபிரசாத்தின் தாய் சுசீலா, தங்கைகள் ஸ்வப்னா (24), ஸ்ரவந்தி (22). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், பூனாபிரசாத் தனது நிலத்தை விற்று வேலைக்காக துபாய் சென்றார். அங்கு பணிக்கு சென்றும் கடன் குறையாததால் ஓராண்டுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பூனாபிரசாத், தனது குடும்பத்துடன் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பல்வஞ்சாவுக்கு மாறினார்.

ஆனால் வேலையில்லாமல் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்ட அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதனை அடைக்க முடியாத நிலையில் மக்ளூரில் உள்ள தனக்கு சொந்தமான 2 வீடுகளை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார். இவரது நண்பர் நிஜாமாபாத்தை சேர்ந்த மக்ளூர் பிரசாத் (38). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூனா பிரசாத் ரூ.10 லட்சம் கடன் கொடுத்திருந்தாராம். அதற்கான வட்டியும் செலுத்தாமல் மக்ளூர் பிரசாத் தட்டிக்கழித்து வந்துள்ளார். இந்நிலையில் பூனாபிரசாத், கடந்த மாதம் மக்ளூர் பிரசாத்திடம் சென்று, `ஏற்கனவே நான் கடன் பிரச்னையில் உள்ளேன். எனக்கு வட்டி தராவிட்டாலும் பரவாயில்லை.

நான் கொடுத்த 10 லட்ச ரூபாயை திரும்ப கொடுத்துவிடு’ என கேட்டுள்ளார். அதற்கு மக்ளூர் பிரசாத், உனது 2 வீடுகளை என் பெயரில் எழுதி கொடுத்தால், அதனை எனக்கு தெரிந்தவர்கள் மூலம் குறைந்த வட்டிக்கு அதிக பணம் கடனாக வாங்கி தருகிறேன். அதன்மூலம் உனது கடன்களை அடைத்து கொள்’ எனக்கூறியுள்ளார். இதனை நம்பிய பூனாபிரசாத், 2 வீடுகளையும் பிரசாத் பெயரில் பதிவு செய்துள்ளார். ஆனால் அவர், தான் தெரிவித்தபடி கடன் வாங்கி தராமலும், பணம் தராமலும் ஏமாற்றியுள்ளார். இதனால் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டது. பூனாபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரை கொன்று விட்டால் ரூ.10 லட்சத்தை திரும்ப தரவேண்டியது இல்லை, 2 வீடுகளும் தனக்கே கிடைத்துவிடும் என திட்டமிட்டார்.

அதன்படி கடந்த மாதம் 28ம் தேதி நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள டிச்பல்லிக்கு பூனாபிரசாத்தை அழைத்து சென்ற மக்ளூர் பிரசாத், அவரை அடித்து கொலை செய்து சடலத்தை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்துள்ளார். இந்நிலையில் பூனாபிரசாத் காணாததால் அவருக்கு ஏற்கனவே கடன் கொடுத்தவர்கள் மக்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மக்ளூர்பிரசாத், பூனாபிரசாத்தின் மனைவி சாத்விகாவிடம் சென்று, ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டு உனது கணவன் போலீஸ் கஸ்டடியில் உள்ளார். அவரை பார்க்கலாம் வா என அழைத்துள்ளார். இதை நம்பிய சாத்விகாவை மக்ளூர் பிரசாத் அழைத்து கொண்டு நிர்மல் மாவட்டம் பாசராவில் உள்ள கோதாவரி ஆற்றங்கரைக்கு சென்று அங்கு அவரை அடித்து கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளார்.

இதேபோல் பூனாபிரசாத்தின் சகோதரி ஸ்வப்னாவை கடந்த 5ம் தேதி மேடக் மாவட்டம் செகுண்டாவின் வடியாரம் புறநகர் பகுதியிலும், அதன்பின்னர் ஸ்ரவதியை கடத்தி சென்று பூம்பள்ளியில் கொலை செய்து எரித்துள்ளான். மேலும் 2 குழந்தைகளை கடந்த 13ம்தேதி கடத்தி சென்று கொலை செய்து கோதாவரி ஆற்றில் வீசியுள்ளான். பூனாபிரசாத்தின் தாய் சுசீலாவிடம் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவதாக அழைத்து சென்று ஒரு லாட்ஜில் அடைத்துள்ளான். இதற்கிடையில் கடந்த 13ம் தேதி பூம்பள்ளியில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக வந்த தகவலின்பேரில் மக்ளூர் பிரசாத் மீது போலீசார் சந்தேகமடைந்தனர்.

அவனை பிடித்து விசாரித்தபோது 6 பேரை கொலை செய்ததும், சுசிலாவை லாட்ஜ்ஜில் அடைத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சுசீலாவை மீட்ட போலீசார் நேற்று மக்ளூர் பிரசாத்தை கைது செய்து விசாரித்தனர். அப்போது முதலில் 3 கொலைகளை அவனே செய்ததும் மற்ற 3 பேரை தனது தாய் ஒட்டம்மா, 16, 17 வயதுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசாரிடம் மக்ளூர் பிரசாத் அளித்த வாக்குமூலம்: பூனா பிரசாத்திடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். அவர் எனக்கு கொடுத்த கடனை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.

எனவே வாங்கிய கடனை திருப்பி தாராமல் அவரது வீட்டை அபகரிக்க எனது தாயுடன் திட்டமிட்டேன். இதற்காக பூனாபிரசாத்தை கொல்ல திட்டமிட்டேன். இதற்காக எனது பெயரில் சொத்து எழுதி கொடுத்தால் வேறு ஒரு இடத்தில் குறைந்த வட்டிக்கு அதிக பணம் வாங்கி தருகிறேன் நம்ப வைத்தேன். அதன்படி பூனா பிரசாத்தும் எனது பெயருக்கு சொத்து வைத்தார். இருப்பினும் நான் அவரிடம் கூறிய பணத்தை தயார் செய்யாததால் என்னை அதிகம் தொந்தரவு செய்ய தொடங்கினார். அவரை குடும்பத்துடன் கொல்ல முடிவு செய்தேன். இதற்காக எனது தாய் மற்றும் தம்பிகளையும் கொலைக்கு உடந்தையாக்கி கொண்டேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர்.

The post சொத்து, பணத்தை அபகரிக்க திட்டமிட்டு நண்பர் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொடூர கொலை: 15 நாளில் அடுத்தடுத்து தீர்த்துக்கட்டிய வாலிபர், தாய், தம்பிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Poonaprasad ,Maklur village, ,Nizamabad district, Telangana ,Satvika ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு