×

141 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த பாஜக அரசின் முடிவு..இந்திய ஜனநாயகத்தை கொல்லும் தீவிர முயற்சி : அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை : 141 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த பாஜக அரசின் முடிவு வெறும் அரசியல் நடவடிக்கை அல்ல; இந்திய ஜனநாயகத்தை கொல்லும் தீவிர முயற்சி என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “141 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த பாஜக அரசின் முடிவு வெறும் அரசியல் நடவடிக்கை அல்ல; இது இந்திய ஜனநாயகத்தை கொல்லும் தீவிர முயற்சி.

இந்த எம்.பி.க்கள் கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் குரல்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். அவர்களை இடைநீக்கம் செய்வது என்பது அம்மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும், கருத்துக்களையும் புறக்கணிப்பதாகும். இது பாஜக மாற்றுக் கருத்துக்களை ஏற்கும் நிலையில் இல்லாததையும், முறையான விவாதங்கள் பாஜகவின் செல்வாக்கை இழக்கச் செய்யும் என்ற அச்சத்தை பிரதிபலிப்பதாகும்.

சிக்கலான தருணங்களில் சில நடவடிக்கைகளை எடுக்கப்பது தவிர்க்க முடியாததாக இருந்தாலும் அவை எதிர்தரப்பு கருத்துக்களை முற்றிலும் ஒடுக்குவது போல் அமைந்து விடக்கூடாது. பல சர்வதேச பார்வையாளர்கள் இந்தியாவின் இந்த போக்கைப் பற்றி கவலை தெரிவித்து வருகிறார்கள், இது நாம் நமது ஜனநாயக விழுமியங்களிலிருந்து விலகிச் செல்வதாகக் பார்க்கப்படுகிறது.

இது போன்ற செயல் ஒரு கட்சி மற்றொரு கட்சியை வெல்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்பதல்லாமல், நாம் கட்டிக்காத்து வரும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும் செயலாகும். எதிர்கட்சிகளை பேச விடாமல் தடுப்பது பாராளுமன்ற நடைமுறைகளுக்கு கேடு விளைவித்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்வதாகும். ஜனநாயகத்தின் உண்மையான பலம் பலதரப்பட்ட கருத்துக்களை கேட்பதும், கருத்து வேறுபாடுகளை கையாள்வதிலும் தான் உள்ளது. வெளிப்படையான விவாதங்கள் மற்றும் அனைத்து கருத்துக்களுக்கும் மரியாதை போன்ற ஜனநாயக மரபுகளை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.

ஒவ்வொரு இந்தியனின் குரலும் கேட்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவுக்கான பாதை இதுவாகதான் இருக்க முடியும், “என்று குறிப்பிட்டுள்ளார்.

The post 141 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்த பாஜக அரசின் முடிவு..இந்திய ஜனநாயகத்தை கொல்லும் தீவிர முயற்சி : அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : M. ,BJP government ,Minister ,Mano Thangaraj ,Chennai ,M. B. ,Mano Tangaraj ,
× RELATED அதிகார மமதையில் ஆட்டம் போடும் ஒன்றிய...