×

“மனம் நொந்து போனேன்” : ஜக்தீப் தன்கர் மிமிக்ரி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேதனை

புதுடெல்லி: “நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை போல நடித்து மிமிக்ரி செய்த விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன்” என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது. இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் அமர்ந்தபடி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு ராகுல் காந்தி வந்த போது, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்பி கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து நடித்து காட்டினார். முதுகெலும்பை வளைத்து குனிந்து நின்றபடி அவர் ராகுலைப் பார்த்து முதுகெலுப்பு இருக்கிறதா என்பது பற்றி தன்கரை போல நடித்து காட்டினார். இதைப் பார்த்து சக எம்பிக்கள் கைதட்டி சிரித்தனர். ராகுலும் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதே போல வேறு சில எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா போல நடித்து கேலி செய்தனர்.

இதற்கு மாநிலங்களவையில் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது எம்.பி.,க்கள் கிண்டல் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா கவலை மற்றும் வேதனை தெரிவித்தார். இந்த நிலையில், இதுதொடர்பாக ஜனாதிபதி அலுவலக எக்ஸ் தள பதிவில், “நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும். அதுதான் நாடாளுமன்ற பாரம்பரியம். அதை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post “மனம் நொந்து போனேன்” : ஜக்தீப் தன்கர் மிமிக்ரி விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேதனை appeared first on Dinakaran.

Tags : President ,Draupadi Murmu ,Jagdeep ,New Delhi ,Vice President ,Jagdeep Dhankar ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்