×

தூத்துக்குடியில் பெருமழை வெள்ளத்தால் உப்பு ஏற்றுமதி முடங்கியது; வேதாரண்யத்தில் உப்பு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..!!

நாகை: தூத்துக்குடியில் கனமழை காரணமாக உப்பு விற்பனை முடங்கியுள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உப்பு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் உப்பு சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் சாலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உப்பு ஏற்றுமதி முடங்கியதால் அடுத்த இடத்தில் உள்ள நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி பணிகள் தீவிரமடைந்துள்ளது. வேதாரண்யம் தாலுக்காவில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்கரை, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுதோறும் 6 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

கோடைக்கால விற்பனை போக சுமார் 3 லட்சம் மூட்டைகளில் உப்பு சேமிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை லாரிகள் மூலம் வாங்கி செல்லும் பணியில் வெளிமாநில வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வேதாரண்யத்தில் ஒரு டன் உப்பு 1,300 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது தேவை அதிகமானதால் 2,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உப்பு விற்பனை பெருகியுள்ளதால் உப்பு மூட்டைகள் பாக்கெட்டுகளை லாரிகளில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். உப்பு விற்பனை பெருகியதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தூத்துக்குடியில் பெருமழை வெள்ளத்தால் உப்பு ஏற்றுமதி முடங்கியது; வேதாரண்யத்தில் உப்பு அனுப்பி வைக்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Vedaranya ,Nagai ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...