×

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது: தாயும், சேயும் நலம் என மருத்துவர்கள் தகவல்

மதுரை: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் இருந்தனர்.

ஆனால், கனமழை காரணமாக அந்த ரயிலானது பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக நேற்று 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அதே சமயம் ரயிலில் மீதமுள்ள 530 பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் நேற்று மாலை மீட்கப்பட்டனர்.

அதற்கு முன்னதாக சூலூரில் இருந்து வந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரின் உதவியுடன் கர்ப்பிணி பெண், 3 குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் அனுசுயா மயில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது: தாயும், சேயும் நலம் என மருத்துவர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Srivaikunda ,Seyum ,Madurai ,Srivaikundam ,Madurai Government Hospital ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!