×

திருமங்கலம் அருகே ஊருணி உடைந்து கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது: அதிகாரிகள் உடனடியாக சரிசெய்தனர்

 

திருமங்கலம், டிச.20: திருமங்கலம் அருகே நேற்று ஊருணி கரை உடைந்து அச்சம்பட்டி கிராமத்திற்குள் மழைநீர் புகுந்தது. உரிய நேரத்தில் உடைப்பை கண்டுபிடித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் சரி செய்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 17ம் தேதி மாலை முதல் 18ம் தேதி மாலை வரையில் தொடர்ந்து மழை பெய்தது. பூசலபுரம், சின்னகாம்பட்டி, சௌடார்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்த மழைநீர் கவுண்டமாநதியில் நடுவக்கோட்டை, அச்சம்பட்டி வழியாக திரளி கண்மாயை சென்றடைந்தது.

இதில் அதிகளவில் மழைநீர் வந்தால் நடுவக்கோட்டை கிராமத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டு திரளி பாலம் வழியாக ஆலம்பட்டி, சிவரக்கோட்டை வழியாக திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுக்காக்களை சேர்ந்த ஏராளமான கண்மாய்களை சென்றடையும் வழியில் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அச்சம்பட்டியில் ஊருணி கரை பலவீனமாக இருப்பது தெரியவரவே அதனை அதிகாரிகள் பலப்படுத்தினர். நேற்று காட்டாற்று தண்ணீர் அதிகளவில் வந்ததால் அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊருணி வழியாக சென்ற நீர் கரையை உடைத்து கிராமத்திற்குள் புகுந்தது.

ஊரணியில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் கிராமத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனை தொடர்ந்து அச்சம்பட்டி கிராமத்து பொதுமக்கள் திரளி விஏஓ ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாபாபுவிற்கும் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர், மற்றும் ஊராட்சிநிர்வாகம் சார்பில் நேற்று பொதுமக்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஊருணி கரையை பலப்படுத்தும் பணிகள் துவங்கின. கரையை பலப்படுத்தியபின்பு தண்ணீர் கிராமத்திற்குள் வருவது தவிர்க்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு கிராமமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

The post திருமங்கலம் அருகே ஊருணி உடைந்து கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது: அதிகாரிகள் உடனடியாக சரிசெய்தனர் appeared first on Dinakaran.

Tags : Uruni ,Thirumangalam ,Oruni ,Tirumangalam ,Achampatti village ,Aurini ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...