×

காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த உடனே தரைப்பாலம் சீரமைப்பு: ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ முயற்சியால் நடவடிக்கை

 

பழநி, டிச. 20: பழநி அருகே பச்சையாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த தரைப்பாலம் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ முயற்சியால் உடனடியாக சீரமைக்கப்பட்டது. பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இடைவிடாது மழை பெய்தது. இதனால் பழநி அருகே பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பழநி அருகே பெருமாள்புதூர் கிராமத்தில் மேம்பால பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பிற்குள்ளாகினர். சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகினர். இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்குமாறு அறிவுறுத்தினார். இதன்படி நேற்று ஒரே நாளில் பழநி ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மணல் மூட்டைகள் மற்றும் பெரிய அளவிலான குழாய்களை அடுக்கி தற்காலிக பாலம் ஏற்படுத்தப்பட்டது. பாலம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்பின்பு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாதென்றும் ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஐ.பி.செந்தில் குமார் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த உடனே தரைப்பாலம் சீரமைப்பு: ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ முயற்சியால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : I.P.Senthilkumar ,MLA ,Palani ,Dinakaran ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை