×

ஒட்டன்சத்திரத்தில் ஆதார் மையங்களை அதிகப்படுத்த கோரிக்கை

ஒட்டன்சத்திரம், டிச. 20: ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆதார் அட்டையில் விலாசம், பெயர் திருத்தம் என பல்வேறு சேவைகளை பெற ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தில் தினமும் 50 டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை முதல் மாலை வரை பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓயாசிஸ் பவுண்டேஷனை சேர்ந்த முகமது நாசர் என்பவர் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தில் தினமும் 50 நபர்களுக்கு மட்டும் டோக்கன் முறையில் சேவையை வழங்கி வருவதால் அதிக காலவிரயம் ஏற்படுகிறது. மேலும் டோக்கன் முறையிலும் 10 நாட்களுக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையம் ஆட்கள் பற்றாக்குறையால் கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் இருந்து வருகிறது.

ஒட்டன்சத்திரம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் சேவைகளை பயன்படுத்துவதற்கு முதலில் நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தை தான் தேடி செல்கின்றனர். அங்கு ஆதார் சேவை மையம் செயல்பாடு இல்லாததால் மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் தேடி வருகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், காலவிரயமும் ஏற்படுகிறது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு நிரந்தர பணியாளர்களை நியமித்து சேவை பணிகளை துவக்க வேண்டும். மேலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் கூடுதல் ஆதார் சேவை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post ஒட்டன்சத்திரத்தில் ஆதார் மையங்களை அதிகப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ottanchatra ,Othanchatram ,Ottanchatram Municipal Office ,Otanchatra ,
× RELATED ஒட்டன்சத்திரம் காய்கறி...