×

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி மக்களவையில் மேலும் 49 எம்பிக்கள் சஸ்பெண்ட்: இதுவரை 141 பேர் மீது நடவடிக்கை; மாநிலங்களவையும் முடங்கியது

* 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் மக்களவை 95 எம்பிக்கள் மாநிலங்களவை 46 எம்பிக்கள்

புதுடெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் இருந்து மேலும் 49 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது. இதே விவகாரத்தால் மாநிலங்களவையும் முடங்கியது. மக்களவையில் கடும் பாதுகாப்பை மீறி கடந்த 13ம் தேதி எம்பிக்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் 2 வாலிபர்கள் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்கக் கோரி, மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

அவை நடத்தை விதிமுறை மீறி பதாகை கொண்டு வந்தும் அமளி செய்ததாலும் கடந்த 14ம் தேதி 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மக்களவையில் 33 பேரும் மாநிலங்களவையில் 45 பேரும் என 78 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது ஜனநாயக படுகொலை என எதிர்க்கட்சிகள் கண்டித்த நிலையில், நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. மக்களவை காலையில் தொடங்கியதும், பாதுகாப்பு குறைபாடு குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர்.

பல எதிர்கட்சி எம்பிக்கள் அரசுக்கு எதிரான வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி அவையில் கோஷமிட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் பகுதியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா இருக்கையின் முன்பாகவும், பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தும் வாசகங்களுடன் பதாகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சோனியா கையில் பிடித்திருக்கவில்லை. யாரும் அவைக்குள் பதாகைகள் கொண்டு வரக்கூடாது எனவும், அனைவரும் இருக்கையில் அமர வேண்டுமெனவும் சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வலியுறுத்தியும் அமளி அடங்கவில்லை.

இதனால் அவை 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி தொடர்ந்தது. பலர் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் நடத்தை விதிமீறிய 49 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘அவைக்கும் பதாகைகள் கொண்டு வரமாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டனர். ஆனால் இப்போது மீறுகின்றனர். சமீபத்தில் 5 மாநில தேர்தல் தோல்வியின் விரக்தியால் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இனியும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் அடுத்த முறை அவர்களால் இந்த அவைக்கே வர முடியாது’’ என்றார்.

பின்னர் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், காங்கிரசின் சசிதரூர், மணீஷ் திவாரி கார்த்தி சிதம்பரம், வைத்திலிங்கம் உட்பட 18 எம்பிக்களும், திமுகவின் ஜெகத்ரட்சகன், பார்த்திபன், செந்தில்குமார் உள்ளிட்ட 6 எம்பிக்களும், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் உட்பட 49 எம்பிக்கள் கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன் மூலம், இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. மக்களவையில் 95 எம்பிக்களும், மாநிலங்களவையில் 46 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையிலும் இதே விவகாரத்தால் காலையில் இருந்தே கடும் அமளி தொடர்ந்தது. 5 முறை அவை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் முடங்கியது.

* இந்தியா கூட்டணியில் எஞ்சியது 43 எம்பிக்கள்
மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை 138. இதில் 95 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 43 பேர் மட்டுமே அவையில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசை பொறுத்த வரையில், சோனியா, ராகுல் உட்பட்ட அக்கட்சியின் 9 எம்பிக்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். 24 எம்பிக்களைக் கொண்ட திமுகவில் 16 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு 8 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். திரிணாமுல் காங்கிரசில் 22 எம்பிக்களில் 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரே ஆம் ஆத்மி எம்பியான சுஷில் குமார் ரிங்கு வெளியேற்றப்பட்டுள்ளார். இவ்வாறாக 3ல் 2 பங்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் மட்டுமே மக்களவையில் எஞ்சி உள்ளனர்.

* முன்பே கணித்த சசிதரூர்
சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கு முன்பாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது டிவிட்டரில், ‘‘எனது 15 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கையில் முதன்முறையாக நானும் பதாகைகள் ஏந்தி மையப் பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டுள்ளேன். நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரத்தில் அரசிடம் கேள்வி கேட்டதற்காக அநியாயமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எனது சக எம்பிக்களுடனான ஒற்றுமைக்காக இதை நான் செய்துள்ளேன். எனவே இன்றும் சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கிறேன்’’ என்றார்.

* தன்கரை போல மிமிக்ரி செய்த திரிணாமுல் எம்பியால் சிரிப்பு: வீடியோ எடுத்த ராகுல்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் அமர்ந்தபடி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ராகுல் காந்தி வந்த போது, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்பி கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து நடித்து காட்டினார். முதுகெலும்பை வளைத்து குனிந்து நின்றபடி அவர் ராகுலைப் பார்த்து முதுகெலுப்பு இருக்கிறதா என்பது பற்றி தன்கரை போல நடித்து காட்டினார். இதைப் பார்த்து சக எம்பிக்கள் கைதட்டி சிரித்தனர். ராகுலும் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதே போல வேறு சில எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா போல நடித்து கேலி செய்தனர்.

இதற்கு மாநிலங்களவையில் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேச எழுந்த போது தன்கர், ‘‘உங்கள் கட்சியின் மூத்த தலைவர், மற்றொரு எம்பி என்னைப் போல் மிமிக்ரி செய்ததை வீடியோ எடுத்ததை பார்த்து நான் மிகவும் வேதனைப்பட்டேன். இன்ஸ்டாகிராமில் உங்கள் கட்சி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளது. அது எனக்கு அவமானமாக இருந்தது. விவசாயியான எனது பின்னணியை அவமதிக்கவும், எனது ஜாட் சமூக பின்னணியை அவமதிக்கவும், அவைத் தலைவர் பதவியை அவமதிக்கவும் டிவிட்டரை பயன்படுத்தி உள்ளீர்கள்’’ என கண்டித்தார். இது ஜனநாயகம் மற்றம் அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயல் என நாடாளுமன்ற விவகாரத்துறை துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டித்தார்.

The post நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி மக்களவையில் மேலும் 49 எம்பிக்கள் சஸ்பெண்ட்: இதுவரை 141 பேர் மீது நடவடிக்கை; மாநிலங்களவையும் முடங்கியது appeared first on Dinakaran.

Tags : Parliament ,New Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...