×

கொடைக்கானலில் அனுமதியின்றி பங்களா பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: கொடைக்கானலில் அனுமதியின்றி பங்களா கட்டுவதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவைச் சேர்ந்த முகம்மது ஜூனைத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபிசிம்ஹா ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இருவரும் நவீன ெசாகுசு பங்களா கட்டி வருகின்றனர். மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்கும் வகையில் முறையான கட்டிட வரைபட அனுமதியுடன் தான் கட்டிடங்கள் கட்ட வேண்டும். ஆனால், இருவரும் முறையான அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு கட்டுமான விதிகளுக்கு எதிராக கட்டிட பணிகள் நடந்துவருகிறது. மண் சரிவு ஏற்படக் கூடிய மலைப்பகுதிகளில் விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். ஜேசிபி மற்றும் பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் மலைகளை குடைகின்றனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, அனுமதியற்ற, விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து முறையாக விசாரித்து இருவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ‘‘நடிகர் பாபிசிம்ஹா அவரது தாயார் கிருஷ்ணகுமாரி பெயரில் கடந்த 2019ல் 2,400 சதுர அடியில் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளார். ஆனால், அனுமதி பெற்ற அளவைவிட கூடுதல் அளவிற்கு கட்டிடம் கட்டியுள்ளார். அதே நேரம் நடிகர் பிரகாஷ்ராஜ் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இதையடுத்து இருவருக்கும் வில்பட்டி ஊராட்சி தரப்பில் கடந்த ஆக. 28ல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தற்போது கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுவிற்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா, திண்டுக்கல் கலெக்டர், கொடைக்கானல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர், வில்பட்டி ஊராட்சி தலைவர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 2க்கு தள்ளி வைத்தனர்.

The post கொடைக்கானலில் அனுமதியின்றி பங்களா பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Prakashraj ,Babi Simha ,Kodaikanal ,Madurai ,Bobby Simha ,Kodaikanal.… ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்