×
Saravana Stores

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு ராஜேஷ்தாஸ்சின் மேல்முறையீடு வழக்கில் ஜனவரி 6ம் தேதி தீர்ப்பு: விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு

விழுப்புரம்: ‘பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் வரும் ஜனவரி 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்’ என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது, பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தன்னுடைய காரில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளிக்க சென்ற எஸ்பியை செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் 16ம் தேதி நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டபட்ட ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,500 அபராதமும், எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இருவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்து வருகிறது. மேல்முறையீட்டு மனு மீதான வாதத்தை தொடங்குவதற்கு ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காலஅவகாசம் கேட்ட நிலையில் கடந்த 18ம் தேதி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி வாதத்தை தொடங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜரானார். தொடர்ந்து ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள், இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதால் வாதத்தை தொடங்க மேலும் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர்.

இதைகேட்ட நீதிபதி ஒரு நாள் அவகாசம் அளித்து நேற்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார். நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் மேலும் கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்து 5 மாதம் ஆகிறது. இதுவரை வாதத்தை தொடங்கவில்லை. இனிமேலும் அவகாசம் அளிக்க முடியாது என்று கூறிய நீதிபதி பூர்ணிமா, வரும் ஜனவரி 6ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து, அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும், என உத்தரவிட்டுள்ளார்.

The post பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு ராஜேஷ்தாஸ்சின் மேல்முறையீடு வழக்கில் ஜனவரி 6ம் தேதி தீர்ப்பு: விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajesh Das ,Villupuram ,DGP ,Rajeshtas ,Rajeshdas ,Villupuram district court ,Dinakaran ,
× RELATED சி.வி.சண்முகம் திடீர் கைது