×

பழவேற்காடு கடற்கரை பகுதியில் எண்ணெய் கழிவுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு: 15 பேர் அடங்கிய மாவட்டக்குழு கண்காணிப்பு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு, அரங்ககுப்பம், கோரைக்குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு குப்பம் பகுதிகளில் கடற்கரை பகுதியில் எண்ணெய் கழிவுகள் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத்துறை, வருவாய்த்துறையினர் மற்றும் மீனவர்களுடன் கலெக்டர் த.பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கலக்கப்பட்ட எண்ணெய் கழிவுகள் திருவள்ளுர் மாவட்டத்திற்கு உட்பட்ட கடற்கரைப்பகுதியில் கலந்துள்ளதா என்பதை கடந்த ஒரு வாராமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர், உதவிபொறியாளர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில், பழவேற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவர்கள் கடற்கரையோரம் எண்ணெய் திட்டுகள் தென்படுவதாக மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் நேற்று அலுவலர்களுடன் சென்று கலெக்டர் பிரபுசங்கர் நேரிடையாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்காக கடல்நீர் மற்றும் கடந்த 4 நாட்களில் கரையோரப் பகுதிகளில் கிடைத்த 7 கிலோ அளவுள்ள எண்ணெய் திட்டுக்ள் ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளது. இதேபோல் எண்ணெய் கழிவுகள் மீன் மற்றும் கடல் உயிரினங்கள் மீது படிந்துள்ளதா என்றும், கழிவு எண்ணெய் மீன் திசுக்களில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து மீனவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தொடர்ந்து, மீனவக்குப்ப கடற்கரையோரப் பகுதிகளில் எண்ணெய் திட்டுகள் தென்படுகிறதா என்பதை 15 பேர் அடங்கிய மாவட்ட அளவிலான குழு, வட்டார அளவிலான குழு தொடர்ந்து கண்காணிக்கும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். தொடர்ந்து, காட்டுப்பள்ளி முதல் லைட்ஹவுஸ் சாலை வரை 12.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நபார்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் கங்காதரன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை ஆய்வாளர் பாரதிராஜா, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் டில்லிபாபு, மீனவர் சங்கப் பிரதிநிதிகிள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், உதவிப்பொறியாளர்கள் உடனிருந்தனர். எம்எல்ஏ ஆய்வு: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ பழவேற்காடு முகத்துவார பகுதியை நேற்று படகில் சென்று பார்வையிட்டார்.

அவருடன் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன், மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன் பாபு, ஒன்றியச் செயலாளர்கள் சுகுமாரன், மணிபாலன், நிர்வாகிகள் பெரும்பேடு ஞானம், மெதூர்கஜா, பணப்பாக்கம் ராஜேந்திரன், மாதரப்பாக்கம் குணசேகரன், கோளூர் கதிரவன் உள்ளிட்டோர் சென்றனர். இதனைத் தொடர்ந்து, பழவேற்காடு பகுதியில் விடுபட்ட மீனவ மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரணப் பொருட்களை எம்எல்ஏ வழங்கினார்.

* 240 பணியாளர்களுடன் அகற்றம் சிபிசிஎல் நிறுவனம் தகவல் மணலி சிபிசிஎல் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை, 4 தொழில்முறை ஏஜென்சிகள் மூலம் சுத்தப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 125 படகுகள், ஆயில் ஸ்கிம்மர்கள், பிரஷர் ஜெட் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கட்டுப்படுத்துதல் மற்றும் உறிஞ்சும் ஏற்றம் இயந்திரம் ஆகியவற்றுடன் சுமார் 240 பயிற்சி பெற்றவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

8 இடங்களில் சுமார் 1500 மீட்டர்கள் கொண்ட கன்டெய்ன்மென்ட் பூம்கள் நிறுவப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் 6 ஆயில் ஸ்கிம்மர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், தண்ணீரில் எண்ணெய் மேலும் குறைந்துள்ளது. நீரிலிருந்து எண்ணெய் படலங்களை அகற்ற சுமார் 24,000 எண்ணைய் உறிஞ்சும் பட்டைகள் மற்றும் 1000 மீட்டர் உறிஞ்சக்கூடிய சாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மை முயற்சிகளில் 5ல் 3 கரையோர பகுதிகளில் வெற்றிகரமாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை முடிவடையும் நிலையில் உள்ளன.

இயந்திரங்களை பயன்படுத்தி வீடுகளை சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களின் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு இணங்குவது கண்காணிக்கப்படுகிறது. சிபிசிஎல் ஆலை மூலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் 3 நடமாடும் மருத்துவ பிரிவுகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, சுமார் 2,700க்கும் அதிகமான தனிநபர்கள் இதில் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பழவேற்காடு கடற்கரை பகுதியில் எண்ணெய் கழிவுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு: 15 பேர் அடங்கிய மாவட்டக்குழு கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Palavekadu beach ,Tiruvallur ,Tiruvallur District ,Ponneri Circle ,Palavekadu ,Arangakuppam ,Koraikuppam ,Karungali ,Pallapadu Kuppam ,
× RELATED ஆடிக்கிருத்திகையை ஒட்டி ஜூலை 29-ம் தேதி...