×

திருப்போரூர் ஒன்றியத்தில் அனைத்து கிராம மக்களுக்கும் வெள்ள நிவாரணம்: பாலாஜி எம்எல்ஏ கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுக்கும் வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பாலாஜி எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி (விசிக) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் பலத்த சேதமடைந்ததை அடுத்து மக்களின் வேதனையையும், வலியையும் தமிழ்நாடு முதல்வராகிய தாங்கள் உணர்ந்ததை மக்கள் நன்கு அறிவர்.

மக்களுக்கு தேவையான நிவாரண உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதை இதயம் கொண்டவர்கள் நன்றியுடன் நினைத்து பார்க்கின்றனர்.  இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதிச்சுமை, ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் வஞ்சனை ஆகியவற்றையும் மீறி ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்துள்ளதை மக்கள் மிரட்சியோடு பார்த்து மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றனர். திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில், திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய தையூர், கேளம்பாக்கம், படூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களுக்கும், வண்டலூர் வட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

அருகருகே அமைந்தும் வெள்ளச்சேதத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களாக இருந்தும் சில கிராமங்கள் நிவாரண உதவிபெறும் பட்டியலில் இடம் பெறவில்லை. குறிப்பாக, வண்டலூர் வட்டத்தில் அடங்கிய தாழம்பூர் ஊராட்சியில் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. அடுத்த தெருவாக அறியப்படும் நாவலூர் ஊராட்சி திருப்போரூர் வட்டத்தில் இருப்பதால் நிவாரண உதவி வழங்க படவில்லை.

அதேபோன்று, முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், மானாம்பதி, பையனூர் உள்ளிட்ட மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் நிவாரண தொகை பெற முடியாத பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆகவே, தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தாயுள்ளத்துடன் திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய வெள்ள சேதமடைந்த கிராமங்களை கண்டெடுத்து நிவாரண உதவி வழங்கிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post திருப்போரூர் ஒன்றியத்தில் அனைத்து கிராம மக்களுக்கும் வெள்ள நிவாரணம்: பாலாஜி எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Union ,Balaji MLA ,Tiruporur ,Dinakaran ,
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...