×

முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கலந்ததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம்: மீனவர்கள் கண்ணீர் பேட்டி

திருவொற்றியூர்: மழை வெள்ளத்தால் மணலியில் சிபிசிஎல் நிறுவனம் எண்ணெய் கழிவுகளை எண்ணூர் முகத்துவார ஆற்றில் விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட விளைவு முகத்துவார ஆறு ரசாயனம் கலந்து சேரும், சகதியமாக மாறி ஆறு மாசடைந்து, ஆற்றுவாழ் உயிரினங்களின் பெருக்கம் நாளுக்கு நாள் குறைந்தது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்தது. தற்போது, எண்ணூரில் பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் முகாமிட்டு கச்சா எண்ணெயை அகற்ற தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் ஒரு சிறிய நடவடிக்கையாவது முன்பு எடுத்திருந்தால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அப்பகுதியில் உள்ள மீனவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் ஆர்ப்பரித்து வரும் கடல் நீரை உள்வாங்கி பின்னர் மீண்டும் கடலுக்கு அனுப்புவதும், புயல் கன மழை காலங்களில் திருவள்ளூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து வரக்கூடிய பெருமழை உபரி நீரை கொசஸ்த்தலை ஆறு வழியாக கடலில் சென்று சேர்க்கும் பணியை கொசஸ்தலை ஆறு, முகத்துவாரம் செய்ததால் கடல் நீர் மற்றும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகாமல் தடுக்கப்பட்டது. இது மீனவர்களுக்கு மட்டுமல்ல வட சென்னையை பாதுகாக்கும் அரணாக இருந்தது. ஆனால் படிப்படியாக இந்த ஆற்றில் கச்சா எண்ணெய் போன்ற கழிவுகள் சேர்ந்ததால் ஆழம் குறைந்து மழை நீர் முழுமையாக செல்ல முடியாமல் குடியிருப்புகளுக்கும் புகுந்ததோடு, ஆயில் படலத்தால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பசுமை தீர்ப்பாயம் மாசுக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போன்ற எத்தனையோ துறை இருந்தும், இந்த கச்சா எண்ணெய் கழிவுகள் முகத்துவார ஆற்றில் கலப்பதை தடுக்க உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளதால் ஏற்பட்டதன் விளைவு இன்று மீன்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது,’’ என்றனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், ‘‘கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை முகத்துவாரம் தெளிந்த நீராக இருக்கும், படகு மேலே போகும்போது தண்ணீருக்கு அடியில் செல்கின்ற நண்டும் மீனும், இறாலும் தெளிவாக தெரியும். மேலும் எண்ணூர் முதல் பழவேற்காடு, புலிகாட் வரை சுமார் 16 கிலோமீட்டர் தூரம் வரை பல நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள், பூச்சி இனங்கள் வாழ்கின்ற அற்புதமான உயிர்சூழல் கொண்ட அலையாத்தி காடுகள் உள்ளன.

இங்கு வெள்ளை இறால், கருப்பு இறால் சங்கு இறால், மண் இறால் என 55 வகையான இறால் இனங்கள், பச்சை நண்டு, களி நண்டு, சிவாலி, நண்டு தேங்காய் நண்டு போன்ற 138 வகையான நண்டு இனங்கள், கெளுத்தி, மடவை, ஊடான், உப்பாத்தி, கீச்சான் கலவான், பண்ணா, கொடுவா போன்ற 546 வகையான மீன் இனங்கள் மற்றும் 308 வகையான நத்தை இனங்கள், 86 வகையான ஊர்வன விலங்குகள், 75 வகையான பாலூட்டிகள், 433 வகையான பறவையினங்கள் மற்றும் எரானமான பூச்ச்சினங்கள் வாழ்ந்தன. ஆனால் ஆற்றின் மாசு காரணமாக இவைகளில் பெரும்பாலன இனங்களை இழந்து விட்டோம். மேலும் மிகவும் மருத்துவ குணம் கொண்ட பச்சை அலி என்கின்ற ஒரு வகை சிற்பி இனம் இப்பகுதியில் அழிந்துவிட்டது. தற்போது இந்த கச்சா எண்ணெய் படலத்தால் மீதமுள்ள நீர் வாழ் உயிரினங்களையும் நாம் இழக்கப்போகிறோம். இதை இயற்கை பாதிப்பு என்பதைவிட மனிதரால் உருவாக்கப்பட்ட நீர் வாழ் உயிரினங்களின் படுகொலை என்று கூற வேண்டும். இதனால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம்,’’ என்றனர்.

The post முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கலந்ததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம்: மீனவர்கள் கண்ணீர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur ,CBCL ,Manali ,Ennore estuary river ,
× RELATED மணலி மண்டலத்தில் பழுதடைந்து...