×

போதையில் வங்கி ஊழியரை தாக்கிய கடலோர காவல் படை வீரர்கள் சஸ்பெண்ட்

சென்னை: கல்பாக்கம் அடுத்த வாயலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதே பகுதியை சேர்ந்த நந்தா (45), ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, நந்தா அந்த வங்கியின் ஏடிஎம் மெஷினில் பணம் நிரப்புவதற்காக சென்றுள்ளார். அங்கு, ஏடிஎம்மின் கதவை தாழிட்டுக் கொண்டு பணம் நிரப்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த வாயலூர் கடலோர காவல் சிறப்பு படையில் பணிபுரிந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் சலாம் (23), மதுரையை சேர்ந்த திருமருதுப்பாண்டி (22) ஆகிய 2 பேர், ‘‘நாங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும். சீக்கிரம் வெளியே வாடா,’’ என்று ஊழியர் நந்தாவிடம் தகராறில் ஈடுபட்டதுடன், ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த நந்தா அலறி கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், அந்த இருவரும் இசிஆர் சாலை பாலாற்று பாலம் அருகே உள்ள கடலோர காவல் படை கட்டிடத்திற்குள் புகுந்து, கதவை தாழிட்டுக் கொண்டனர். உடனே அங்கு திரண்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போதையில் வங்கி ஊழியர் நந்தாவை சரமாரியாக தாக்கிய கடலோர காவல் படையினரை கைது செய்ய வேண்டும் என்று கடலோர காவல் படை கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றி அறிந்த திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் சதுரங்கப்பட்டினம் போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் வெளியே வரவழைத்து திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அவர்கள் போதையில் இருந்ததற்கான மருத்துவ சான்று பெற்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து காவலர்கள் இருவரையும் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை கமாண்டென்ட் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

The post போதையில் வங்கி ஊழியரை தாக்கிய கடலோர காவல் படை வீரர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Coast Guard ,Chennai ,Nanda ,Vayalur ,Kalpakkam ,
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...