×

10 லட்சம் பறிக்கும் நோக்குடன் சிறுவனை கடத்தி கொன்றது அம்பலம்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல்

சென்னை: கடத்தப்பட்ட சிறுவன், சடலமாக மூட்டையில் மீட்கப்பட்ட நிலையில் இந்த, கொலையில் பெண்ணுடன் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இறந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தமிழக – ஆந்திரா எல்லையை ஒட்டி மாதர்பாக்கம் அருகே அமைந்துள்ளது பல்லவாடா கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 16ம் தேதி மாலை சுரேஷ் – சிந்துமதி தம்பதியரின் மகன் அனிஷ் (8) திடீரென மாயமானான். இதுகுறித்து பெற்றோர் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதே சமயம், பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சிறுவன் அனிஷ் சென்றதாக அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் சிலர் தெரிவித்தனர். அப்பெண் சிறுவனின் உறவினராவார். இதனை தொடர்ந்து, கடந்த 17ம் தேதி மாயமான சிறுவனை போலீசார் கண்டுபிடித்துத் தர வேண்டும் என கிராம மக்களும், உறவினர்களும் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சிறுவனை கடத்தியதாக கூறப்படும் பல்லவாடா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ரேகாவை (32) போலீசார் பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். இதில், சிறுவன் அனிசை ரேகா மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்று, அடித்துக் கொலை செய்து, சடலத்தை மூட்டையில் கட்டி ஆந்திரமாநிலம் புஜ்ஜிநாயுடு கண்டிகை அருகே ஒரு முட்புதரில் வீசியது போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும், சிறுவன் அனிஷை, இளம்பெண் ரேகா மற்றொரு நபருடன் சேர்ந்து கடத்தி கொலை செய்திருப்பதும், ₹10 லட்சம் பறிக்கும் நோக்குடன் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சிறுவன் கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கைதான ரேகாவிடம் பல செல்போன்கள், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. கொலைக்கான காரணம் மற்றும் கொலையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய காலம் தாழ்த்தி வருவதாகவும் பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாதர்பாக்கம் – சத்தியவேடு நெடுஞ்சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. இதுகுறித்து கேள்விபட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சி, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி, ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த கொலை சம்பவத்தில் வருதபாளையத்தைச் சேர்ந்த ரவனய்யா (35) என்பவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் மறியலில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், மாதர்பாக்கம் – சத்தியவேடு நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post 10 லட்சம் பறிக்கும் நோக்குடன் சிறுவனை கடத்தி கொன்றது அம்பலம்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல் appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Chennai ,
× RELATED பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம்...