×

வெள்ள நிவாரண நிதியுதவி வழங்க கோரி 12 மீனவ கிராம மக்கள் பேரணி, சாலை மறியல்: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மீனவ கிராம மக்கள், நிவாரண நிதியுதவி வழங்கக்கோரி, பேரணியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். எண்ணூர் முகத்துவார ஆறு மற்றும் கடல் பகுதியில் உபரி நீர்வெள்ளத்தில், ஒன்றிய அரசின் சிபிசிஎல் நிறுவன கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்ததால், கடந்த 15 நாட்களுக்கு மேலாக 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் வருமானம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். சிபிசிஎல் நிறுவனம் மற்றும் பாசுகட்டுப்பாடு வாரியம் இணைந்து, கடல் மற்றும் முகத்துவாரத்தில் மிதக்கும் எண்ணெய் படலத்தை, மீனவர்கள் உதவியுடன் அகற்றி வருகின்றனர். இந்த, எண்ணெய் படலத்தால் படகு, மீன்பிடி வலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டதால் எண்ணூரை சேர்ந்த 8 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு கோரி 2 நாட்களாக மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ₹12,500 மற்றும் சேதமான படகுகளுக்கு ₹10 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட நல்லதண்ணீர் ஓடைகுப்பம், திருச்சினாங்குப்பம், ஒண்டிக்குப்பம், திருவொற்றியூர் குப்பம், பலகை தொட்டி குப்பம், கே.வி.கே.குப்பம் உள்ளிட்ட 12 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுமார் 500 பேர், திருச்சினாங்குப்பம் அருகே எண்ணூர் விரைவு சாலையில் நேற்று ஒன்றுகூடி அங்கிருந்து ஊர்வலமாக சென்று எல்லையம்மன் கோயில் தெரு அருகே வந்தனர். அப்போது, `மிக்ஜாம் புயல், மழை வெள்ளம் மற்றும் எண்ணெய் படலத்தால் மீன் பிடிக்கும் படகுகளும், வலைகளும் சேதமாகியுள்ளது. 20 நாட்களாக தொழிலுக்கு போக முடியாமல் சிரமப்படுகிறோம். எண்ணூரில் 8 கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவிவித்ததுபோல் தங்களுக்கும் நிவாரணம் அறிவித்து இதற்கான கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த வலைகளை புதுப்பித்து தர வேண்டும்’ என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த, கே.பி.சங்கர் எம்எல்ஏ, காவல் இணை கமிஷனர் மனோகரன், வண்ணாரப்பேட்டை காவல் துணை கமிஷனர் சக்திவேல், கோட்டாட்சியர் இப்ராஹிம், மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி காவல் ஆணையர் சிதம்பர முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, `புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 மீனவ கிராமத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது, தென்மாவட்டங்களில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை கவனிக்க அமைச்சர், அதிகாரிகள் சென்றுள்ளனர். அவர்கள் வந்தவுடன் உங்களது கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்’ என்று கே.பி.சங்கர் தெரிவித்தார். இதை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post வெள்ள நிவாரண நிதியுதவி வழங்க கோரி 12 மீனவ கிராம மக்கள் பேரணி, சாலை மறியல்: திருவொற்றியூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...