×

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.! ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம்: சன்ரைசர்சில் கம்மின்சுக்கு ரூ.20.5 கோடி

துபாய்: இந்தியன் பிரிமியர் லீக் டி20 தொடர் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமை ஆஸ்திரேலியா வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்குக்கு கிடைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ரூ.24.75 கோடிக்கு வாங்கியது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே, 2024 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் துபாய், கோகோ கோலா அரங்கில் நேற்று நடைபெற்றது. பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கிய ஏலத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரி, லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 10 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

ஏலத்தை மல்லிகா சாகர் முன்னின்று நடத்தினார். ஐபிஎல் ஏலத்தை நடத்திய முதல் பெண் என்ற சாதனையை மல்லிகா சாகர் (48 வயது) நிகழ்த்தியுள்ளார். மும்பையை சேர்ந்த இவர் கலைப்பொருட்களை ஏலம் விடுவதில் 23 ஆண்டு அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 புரோ கபடி லீக் வீரர்கள் ஏலத்தையும் நடத்தியுள்ளார். ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 1,166 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் இருந்து 333 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் 214 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். எஞ்சிய 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். ஏலத்தில் 333 வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும், அணிகளின் மொத்த தேவை 77 பேர்தான். இவர்களிலும் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களுக்கான ஊதியம் போக எஞ்சியுள்ள தொகைக்கு மட்டுமே தேவையான வீரர்களை ஏலம் கேட்க முடியும் என்பதால், நேற்றைய ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முதல் வீரராக வெஸ்ட் இண்டீசின் ரோவ்மன் பாவெல் ஏலம் விடப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கடும் போட்டிக்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ரூ.7.40 கோடிக்கு வாங்கியது. அடுத்து தென் ஆப்ரிக்காவின் ரைலீ ரூஸோ ஏலம் விடப்பட்டார். இவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. அடுத்து இங்கிலாந்தின் ஹாரி புரூக் பெயர் ஏலத்துக்கு வர, அவரை டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ரூ.2 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்துக்கு வந்த நிலையில், அவரை வாங்க சிஎஸ்கே – சன்ரைசர்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் சன்ரைசர்ஸ் அணி ரூ.6.80 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது.

முதல் முறையாக ரூ.20+ கோடி:

ஏலத்தில் அடுத்து வந்த சில வீரர்கள் விலை போகவில்லை. ரச்சின் ரவிந்திராவை (அடிப்படை விலை ரூ.50 லட்சம்) ரூ.1.80 கோடிக்கும், ஷர்துல் தாகூரை ரூ.4.00 கோடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்தது. அடுத்து உலக கோப்பையை வென்ற ஆஸி. அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பெயர் அறிவிக்கப்பட, ஏலம் திடீரென் சூடு பிடித்தது. அவரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்… சென்னை, மும்பை, பெங்களூரு அணிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டன. போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும் குதிக்க, ரூ.10 கோடி… ரூ.15 கோடி என விலை எக்குத்தப்பாய் எகிறியது. கம்மின்சை எப்படியும் வாங்கியாக வேண்டு என்ற முடிவோடு தொகையை போட்டி போட்டு உயர்த்திய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி, இறுதியில் ரூ.20.50 கோடிக்கு அவரை ஒப்பந்தம் செய்தது.

ஐபில் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுகப்பட்ட வீரர் என்ற பெருமை கம்மின்சுக்கு கிடைத்தது. ஆனால் இந்த சாதனை நீண்ட நேரம் நிலைக்கவில்லை! தென் ஆப்ரிக்காவின் ஜெரால்டு கோட்ஸீ ரூ.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்திய ஆல் ரவுண்டர் ஹர்ஷல் படேல் கடும் போட்டிக்கிடையே குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.11.75 கோடிக்கும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் சிஎஸ்கே அணியால் ரூ.14.00 கோடிக்கும் ஒப்பந்தமாகினர். 3வது செட்டில் சால்ட், இங்லிஸ், குசால் மெண்டிஸ், லோக்கி பெர்குசன், ஹேசல்வுட் ஆகியோர் விலைபோகாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெஸ்ட் இண்டீஸ் வேகம் அல்ஜாரி ஜோசப் ரூ.11.50 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டார். உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் ரூ.5.80 கோடிக்கு ஏலம் எடுத்தது.

சாதனை முறியடிப்பு: அடுத்ததாக ஆஸ்திரேலிய வேகம் மிட்செல் ஸ்டார்க் ஏலம் விடப்பட்டார். அவரை வாங்க மும்பை, டெல்லி, கொல்கத்தா, குஜராத் அணிகள் வரிந்துகட்டின. யாரும் எதிர்பாராத வகையில் ஏலத் தொகை ஏறிக்கொண்டே இருந்தது. கம்மின்ஸின் சாதனை தொகையான ரூ.20.50 கோடியையும் தாண்டி எகிற ஏலம் போர்க்களமானது. 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கும் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.24.75 கோடிக்கு வாங்க, பார்வையாளர்கள் வாய் பிளந்தனர். கம்மின்சின் சாதனை ஒரு மணி நேரம் கூட தாக்குப்பிடிக்காமல் தவிடு பொடியாக நொறுங்க, ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் தட்டிச் சென்றார். தொடர்ந்து நடந்த ஏலத்தில் நட்சத்திர வீரர்கள் அடில் ரஷித், ஈஷ் சோதி, ஷம்சி, முஜீப் உர் ரகுமான் ஆகியோரை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. மொத்தத்தில் ஐபிஎல் 2024 மினி ஏலம் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் அமைந்து உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.! ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம்: சன்ரைசர்சில் கம்மின்சுக்கு ரூ.20.5 கோடி appeared first on Dinakaran.

Tags : IPL ,Starc ,Dubai ,Indian Premier League T20 series ,Stark ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி