×

ரூபாவுக்கு எதிராக ரோகிணி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

டெல்லி: ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது. கர்நாடக மாநில ஐ.பி.எஸ் அதிகாரியான ரூபா மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரோகிணி சிந்தூரிக்கு இடையில் சமூக வலைதள சண்டை இருந்தது. ரோகிணி சிந்தூரி தன் மீது சுமத்தப்பட்ட அவதூறுக்காக, ரூபா மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் கடந்த 13ம் தேதி நீதிபதிகள் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

கர்நாடக அதிகாரிகள் இருவருக்கும் இடையில் மூன்றாவது நபரை வைத்துப் பேசி பரஸ்பர புரிந்துணர்வுக்கு உள்ளாகும்படி பரிந்துரைக்கப்பட்டது. விசாரணையில் இது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் கூறுகையில், `இரு அதிகாரிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் இப்படிச் சண்டையிட்டால் நிர்வாகம் எப்படிச் செயல்படும். நீக்கப்பட்ட சோஷியல் மீடியா பதிவுகள் குறித்து (15ம் தேதி) ரூபா பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும், ரூபாவால் அந்தப் பதிவுகளை நீக்க முடியாவிட்டால், ரோகிணிக்கு எதிரான அறிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு பதிவையாவது வெளியிட வேண்டும்.

பொழுதுபோக்குக்காக உங்களது மனுவை விசாரிக்கிறோம் அல்லது உங்களுக்கு ஆதரவாக நடத்த முயல்கிறோம் என்ற அபிப்பிராயத்தில் இருக்க வேண்டாம். நாங்கள் அதற்காக இதைச் செய்யவில்லை. மாநில நிர்வாகத்துக்காக நாங்கள் இதைச் செய்கிறோம்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ரூபா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘ரூபாவுக்கு எதிராக ரோகிணி சிந்தூரி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

The post ரூபாவுக்கு எதிராக ரோகிணி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rokini ,Ruba ,Supreme Court ,Delhi ,IAS ,IPS ,Rupa ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு