×

ஏன் எதற்கு எப்படி…?: வாஸ்துவிற்கு தனித்தனி பரிகாரம் செய்ய வசதி இல்லாதபோது எளிமையாக நிவர்த்தி செய்ய ஒரு வழி சொல்லுங்கள்..!!

வாஸ்துவிற்கு தனித்தனி பரிகாரம் செய்ய வசதி இல்லாதபோது எளிமையாக நிவர்த்தி செய்ய ஒரு வழி சொல்லுங்கள்.
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

வீட்டுப் பூஜையறையில் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி வழிபட வேண்டும். தினமும் வாயிலில் சாணம் கரைத்து தெளித்து கூட்டிப்பெருக்கி கோலம் போட வேண்டும். வீட்டு வாசல்படிக்கு வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து வழிபட வேண்டும். வீட்டிற்குள் நுழையும் இடத்தில் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து அதில் மலர்களை அழகாக வைத்திருக்க வேண்டும். தலைவாசக்காலை ஒட்டியவாறு ஒரு நிலைக்கண்ணாடியை வாயில்புறத்தை நோக்கியவாறு மாட்டி வைப்பதும் நல்லது. இதுபோன்ற மங்களகரமான செயல்களைத் தொடர்ந்து செய்து வந்தாலே அந்த இல்லத்திற்குள் எந்தவிதமான தோஷமும் அண்டாது.

? தாயே தெய்வம், தந்தையே தெய்வம், குருவே தெய்வம் என்று உபநிடத்தில் சொல்லப்பட்டுள்ளதா?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தாய், தந்தை, குரு இவர்களை வணங்க வேண்டும் என்றுதான் உபநிடதம் சொல்கிறது. தெய்வம் என்று சொல்லவில்லை. வணங்குதல் என்பது வேறு, தெய்வம் என்பது வேறு. மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ என்று உபநிடதம் சொல்கிறது. மாத்ருதேவோ என்றால் தாயாரை தெய்வம் என்று சொல்லவில்லை, தேவர்களுக்கு இணையாக வணங்க வேண்டும் என்று சொல்கிறது. இவர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றும் உபநிடதம் வலியுறுத்துகிறது.

? மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை வரனாகத் தேர்வு செய்யலாம்?
– பி.கனகராஜ், மதுரை.

மூலம் மட்டுமல்ல, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் எந்த நட்சத்திரத்தைச் சேர்ந்த வரனையும் தேர்வு செய்யலாம். நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பொருத்தம் பார்ப்பது சரியல்ல. அவரவர் பிறந்த ஜனன ஜாதகத்தைக் கொண்டுதான் பொருத்தம் பார்க்க வேண்டும். நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே முக்கியம் என்பது தேவையற்ற ஒன்று என்பதுதான் அடியேனின் தாழ்மையான கருத்து. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷம் என்றும் மாமியாருக்கு ஆகாது என்றும் சொல்வது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

? சிவாலயங்களில் பிரதோஷ காலத்தில் பிரதோஷ சுற்று முறையில் உள்ள தாத்பரியம் கூறவும்.
– ஜெயக்குமார், வந்தவாசி.

இதனை `சோம சூக்த பிரதட்சிணம்’ அல்லது `சோம சூத்ர பிரதட்சிணம்’ என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த பிரதட்சிணமானது பிறைச்சந்திரனின் வடிவினைப் பெறுவதால் இதனை சோமரேகைப் பிரதட்சிணம் என்றும் அழைப்பார்கள். நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு சண்டிகேஸ்வரர் சந்நதி வரை சென்று அவரை வணங்கி பின்னர் திரும்பி நந்திதேவரிடம் வந்து அங்கிருந்து வலப்புறமாக கோமுகம் வரை சென்று வணங்கி மீண்டும் நந்தியிடம் வந்து சண்டிகேஸ்வரர் வரை சென்று வணங்குவார்கள். அதன் பின்பு மூன்று முறை ஆத்ம பிரதட்சிணம் செய்து வழிபட வேண்டும் என்றும் இதனை பிரதோஷ நாட்களில் பிரதோஷ காலத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். இவ்வாறு மாறி மாறி சுற்றுவதன்மூலம் பிறவா வரம் கிடைக்கும் என்றும் மோட்ச பிராப்தி சித்திக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

? பல்லி சத்தம் எழுப்பினால் நல்லதா?
– த.சத்தியநாராயணன், சென்னை.

பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கத்திலேயே கொடுத்திருப்பார்கள். ஒவ்வொரு கிழமைக்கும் பல்லி எந்த திசை நோக்கி சத்தம் எழுப்புகிறது என்பதற்கும் தொடர்பு உண்டு. அதற்கு ஏற்றார்போல் பல்லி சத்தம் எழுப்புவதன் பலனை அறிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, வெள்ளிக்கிழமை நாளில் மேற்கு நோக்கி பல்லி சத்தம் எழுப்பினால் சந்தோஷம் கிடைக்கும் என்றும் அதே மேற்கு திசையை நோக்கி ஞாயிறு அன்று சத்தம் எழுப்பினால் சண்டை உண்டாகும் என்றும் பலன் சொல்லியிருப்பார்கள். ஆக பல்லி சத்தம் எழுப்பினால் பலன் என்பது உண்டு. அது நற்பலனா அல்லது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய பலனா என்பதை அந்தந்த கிழமையையும் அது எந்த திசையை நோக்கி ஒலி எழுப்புகிறது என்பதையும் பொறுத்து பஞ்சாங்கத்தைப் பார்த்து அறிந்துகொள்ள வேண்டும்.

? பெற்றோர்களின் பாவபுண்ணியம் பிள்ளைகளைச் சேருமா?
– அசோகன், சென்னை.

நிச்சயமாக. “மாதா, பிதா மக்களுக்குச் சத்ரு’’ என்பார்கள். பெற்றோர்கள் செய்யும் பாவ புண்ணியம் கண்டிப்பாக பிள்ளைகளைச் சென்றடையும். ஒருவன் சம்பாதித்த சொத்தினை அனுபவிக்கும் உரிமை அவனது வாரிசுகளுக்கு உண்டு எனும்போது, இது மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுமா? புண்ணியம் செய்தவனின் பிள்ளை, தீயவனாக இருந்தாலும் அவன் நல்ல உயர்ந்த நிலையில் வாழ்வதையும், பாவங்களை அதிகமாகச் செய்தவனின் பிள்ளை, நல்லவனாக இருந்த போதிலும் அவன் வாழ்க்கையில் சிரமப்படுவதையும் நடைமுறை வாழ்வினில் நாம் கண்டு வருகிறோமே! அதனால்தான் ஜோதிடர்கள், பிள்ளைகளைக் குறிக்கும் ஐந்தாம் பாவத்தை ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் பெற்றோரைக் குறிக்கும் ஒன்பதாம் பாவத்தை பாக்ய ஸ்தானம் என்றும் குறிப்பிடுவார்கள். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே நம் பிள்ளைகளின் வாழ்வு அமையும். பெற்றோர் செய்யும் பாவ, புண்ணியம் பிள்ளைகளையும் சேரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

? ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?
– சீனுவாசன், மணம்பூண்டி.

கூடாது. ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி வந்தால் அதற்கு ‘மலமாஸம்’ என்று பெயர். அதே போல, எந்த மாதத்தில் பௌர்ணமி அல்லது அமாவாசை இல்லையோ அதனை ‘விஷமாஸம்’ என்றழைப்பர். இந்த மாதங்களிலுமே சுபநிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. ஆனால், சித்திரை, வைகாசி மாதங்களுக்கு இந்த விதி பொருந்தாது. சித்திரையை மேஷ மாதம் என்றும், வைகாசியை ரிஷப மாதம் என்றும் அழைப்பர். பௌர்ணமி, அமாவாசை நிகழ்வதற்கு மூலகாரணமான சூரியன் மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும் உச்ச பலம் பெறுவதால் மேஷ, ரிஷப மாதம் என்றழைக்கப்படும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களுக்கு தோஷம் இல்லை. இவற்றில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி…?: வாஸ்துவிற்கு தனித்தனி பரிகாரம் செய்ய வசதி இல்லாதபோது எளிமையாக நிவர்த்தி செய்ய ஒரு வழி சொல்லுங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Anna Anbazhagan ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்