×

நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய வியூகங்களை வகுக்க டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் தொடங்கியது: 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து ஆலோசனை

டெல்லி: 92 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்டுக்கு மத்தியில், டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 26 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணி அமைத்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் ‘இந்தியா‘ கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலை முன்னிட்டு இந்த கூட்டணியின் கூட்டம் 4 மாதங்களுக்கு பின்னர் டிச. 6ம் தேதி டெல்லியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கூட்டணியில் உள்ள அனைத்து முக்கிய தலைவர்களும் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத் பவார், மம்தா பானர்ஜி பங்கேற்பு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் பங்கேற்பு, உத்தவ் தாக்கரே, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நேற்று வரை பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 92 எம்பிக்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நேற்று மட்டும் 78 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் இருந்து 33 பேரும், மாநிலங்களவையில் இருந்து 45 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பெரும்பாலான எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையிலான எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முன்புள்ள காந்தி சிலை முன் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற இருஅவைகள் கூடியதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடக்கும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த மூன்று பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இன்றைய கூட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர், செய்தித் தொடர்பாளர் நியமனம் மற்றும் பொதுச் செயலக அலுவலகம் அமைப்பது, லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றதால், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளுடன் ஓர் இணக்கமான சூழலை காங்கிரஸ் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

The post நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய வியூகங்களை வகுக்க டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் தொடங்கியது: 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : 'India' ,Delhi ,92 Confrontation MBIs ,India ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...