×

குடியிருப்பை சூழ்ந்த மழைநீர் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு, டிச.19: அழகர் மகன் ஓடையை முன்கூட்டியே தூர்வாரததால் மழைநீர் குடியிருப்பில் சூழ்ந்ததாக குற்றம் சாட்டி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் முதல் கன மழை பெய்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவோடு இரவாக பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு இரு அணைகளிலும் நீரை திறந்து விட்டனர்.

அதன்படி தற்போது பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதமும், கோவிலாறு அணையில் இருந்து வினாடிக்கு 416 கன அடி வீதமும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் ஒரே சமயத்தில் நீர் திறந்து விடப்பட்டதாலும் அதிகபட்ச நீர் திறந்து விடப்பட்டதாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடமுருட்டி பாலம், மரிச்சுகட்டி பாலம், கல்யாணி ஓடை பாலம் ஆகியவற்றை மூழ்கடித்து செல்கிறது.

சா.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பாக உள்ள கல்யாணி ஓடை குப்பைகளால் அடைபட்டு கிடந்ததால் அங்கு தண்ணீர் வெளியேற வழி இன்றி அருகில் உள்ள தைக்கா தெரு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்குள்ள வீடுகளைச் சுற்றிலும் நீர் தேங்கியது. இதனால் அப்பகுதியினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அப்பகுதி மக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

The post குடியிருப்பை சூழ்ந்த மழைநீர் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : STBI ,Vathrayiru ,Alakar Makan ,STBI party ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தேயிலைத் தோட்ட...