×

ஆன்லைனில் வேலைவாய்ப்பு என ஆசைவார்த்தை கூறி நூதன முறையில் ரூ.35.12 லட்சம் மோசடி: டெல்லி ஆசாமி கைது

சென்னை: ஆன்லைனில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் ரூ.35.12 லட்சம் மோசடி செய்த டெல்லி ஆசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் கிங்ஸ்லி (45). இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் ஆப்பில் வந்த ஒரு லிங்கில், நல்ல சம்பளத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக செய்தி வந்தது. இதனை பார்த்து, அந்த லிங்கை தொடர்பு கொண்டபோது https://www.globalratingsys.com லிங்கில் உள்ள ஓட்டல்களுக்கு ரிவியூ பார்த்து ரேட்டிங் அளிக்க கூறியுள்ளனர்.

ஒவ்வொரு, ரேட்டிங் அளித்தவுடன் அதற்கேற்ப கமிஷன் தொகை வரும் என ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்பேரில், ரேட்டிங் அளித்தவுடன் முதலில் இவரது கணக்கிற்கு வந்த சிறு தொகையை பார்த்தவுடன் இது உண்மை என நம்பினார். பின்னர், உங்களது ரேட்டிங் கமிஷன் தொகையை பெற வேண்டுமெனில், நாங்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு டெபாசிட் பணத்தை அனுப்ப வேண்டும் என கூறியதால், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, அவர்களை கூறுவதை நம்பி சுமார் ரூ.9,11,003 கிங்ஸ்லி அனுப்பி உள்ளார். பணம் திரும்பி வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதே போன்று, முகலிவாக்கத்தை சேர்ந்தவர் கேசவ்மோகன் (46) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும், இதேப்போன்று சுமார் ரூ.26,01,375 அனுப்பி உள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களுக்கு சேர வேண்டிய கமிஷன் தொகையையும் தராமல் தங்களை ஏமாற்றி பணத்தையும் மோசடி செய்துள்ளதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் இருவரும் கடந்த மாதம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர், உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இதில், மோசடி செயலில் ஈடுபட்டுள்ள நபர்களின் வங்கி கணக்குகள் மூலமாக குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதாக தெரிய வந்தது. அங்கு, விரைந்து சென்று விசாரணை செய்த ஆவடி இணைய வழி குற்றப் பிரிவு தனிப்படை போலீசார், டெல்லி விவேகானந்தபுரியை சேர்ந்த விபின் குப்தா என்பவரை கைது செய்தனர்.  பின்னர், பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், விபின் குப்தாவின் மகன் சுபம் குப்தா என்பவரும் அபிசேக் மற்றும் வட இந்தியாவை சேர்ந்த பலர் இந்த மோசடி செயலில் ஈடுபட்டுள்ளதும், இச்செயல் மூலமாக நாட்டின் பல மாநிலத்தை சேர்ந்த பல நபர்களை ஏமாற்றி பல கோடி ரூபாயை சுருட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. தலைமறைவு குற்றவாளிகளை இணைய வழி குற்றப் பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள், தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்கில் வரும் செய்திகளை பார்த்து, தேவையில்லாத லிங்க் மூலம் பணத்தை இழக்க வேண்டாம் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினர்.

The post ஆன்லைனில் வேலைவாய்ப்பு என ஆசைவார்த்தை கூறி நூதன முறையில் ரூ.35.12 லட்சம் மோசடி: டெல்லி ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Asami ,Chennai ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...