×

எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் வேறு தொழிற்சாலைகளில் இருந்து எண்ணெய் கழிவுகள் வருகிறதா என வல்லுநர் குழு ஆய்வு: மாநகராட்சி ஆணையர் தகவல்

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில், வேறு தொழிற்சாலைகளில் இருந்தும் எண்ணெய் கழிவுகள் வருகிறதா, என வல்லுநர் குழு ஆய்வு செய்து வருவதாக, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக புழல் ஏரி உபரி நீருடன் மணலி சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் சடையன்குப்பம், சத்தியமூர்த்தி நகர், ஆதிதிராவிடர் காலனி மற்றும் எண்ணூர் சிவன் படை வீதி, காட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் போன்ற பல்வேறு பகுதிகளில் எண்ணூர் முகத்துவார ஆற்றில் எண்ணெய் படலம் மிதந்தது.

மீன்பிடி வலைகள், பைபர் படகுகள் இந்த எண்ணெய் படலத்தால் சேதமடைந்தன. இதனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் சிபிசிஎல் நிறுவனம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் இணைந்து 4 ஏஜென்சிகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் முகத்துவார ஆற்றில் இருந்து எண்ணெய் படலத்தை பேரல்களில் நிரப்பி, அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பொக்லைன், ஹைட்ராஸ், டிராக்டர் டிரைலர், டம்பர்கள், ஸ்கிம்மர், கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் போன்ற பல்வேறு இந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொண்டும் எண்ணெய் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சடையன்குப்பம் அருகே எண்ணூர் முகத்துவார ஆற்றோடு இணைந்திருக்கும் உபரி நீர் கால்வாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள காலி நிலங்களில் உள்ள கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் வகையில், 20க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று, பணியாளர்கள் செடி கொடிகளையும், மரக் கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 7வது நாளாக தொடரும் இந்த பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து, அங்கு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முகத்துவார ஆற்றில் எண்ணெய் கழிவுகள் பாதிப்பு கடுமையாக உள்ளது. மேலும், இந்த பகுதியில் 8 மீனவ கிராமங்கள் மற்றும் எர்ணாவூரில் ஆதிதிராவிட காலனி உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல துறையின் வல்லுநர்கள், அதிகாரிகள் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் இதுவரை 160 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 60 ஆயிரம் லிட்டர் எண்ணெய் எடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தோண்டப்படும் மணலை இங்கு கொண்டு வர நீர்வளத்துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவும், மாவட்ட அளவில் ஒரு குழுவும் இதற்காக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது ஒரு தொடர் பணி. அதனால் குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிக்க முடியாது.

கழிவுகளை அகற்றுவது வரை நாங்கள் இங்கு களப்பணியில் இருப்போம். ஐதராபாத், மும்பையில் இருந்து வல்லுனர் குழுக்கள் வந்துள்ளன. பல வல்லுனர்களின் கருத்துக்களை இணைத்து இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. வேறு தொழிற்சாலைகளில் இருந்தும் கழிவுகள் வருகிறதா என வல்லுநர் குழு பார்வையிட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.

* சிறப்பு சட்டம் உருவாக்க வேண்டும்
பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், ‘‘இந்த கச்சா எண்ணெய் ஆற்றின் மேல் பகுதியில் மட்டுமல்லாது, ஆற்றுக்கு கீழே சுமார் 5 அடி ஆழத்தில் சேறும், சகதியுடன் கலந்து இருக்கிறது. மனித சக்திகளை கொண்டு முழுமையாக கச்சா எண்ணெய் அகற்றுவது முடியாத காரியம். 50 ஆண்டுகளுக்கு முன் முகத்துவார ஆறு சுமார் 16 அடி ஆழத்திற்கு அதிகமாக இருந்தது. தற்போது ஆற்று நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே இந்த முகத்துவார ஆற்றை முழுமையாக தூர்வாரி இருபுறமும் பலமான கரையமைக்க ஒரு சிறப்பு திட்டம் தயாரிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணிகளை கண்காணிக்கும் பொறுப்பை அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதி, சமூக நல ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து செயல்படுத்த வேண்டும். எண்ணூர், மணலி மற்றும் அதைச் சுற்றி உள்ள நிறுவனங்களிலிருந்து கழிவுகள் முகத்துவார ஆற்றில் விடப்படுவதை தடுக்க வேண்டும். இதை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இனி வரக்கூடிய காலங்களில் இந்த முகத்துவார ஆற்றையும், அதை நம்பி வாழும் மீனவர்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க முடியும்,’’ என்றனர்.

* 2வது நாளாக மறியல்
புழல் ஏரி உபரி நீரில் சிபிசிஎல் நிறுவன கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் எண்ணூர் மீனவர்கள் மற்றும் திருவொற்றியூர் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்புகளுக்கு மழைக்கால நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் மட்டுமின்றி, தனியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மீனவர்களும், குடியிருப்போர் நல சங்கங்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இதற்கான கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர் ஜோதிநகர் பகுதியில் கச்சா எண்ணெய் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் நெடுஞ்சாலையில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

The post எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் வேறு தொழிற்சாலைகளில் இருந்து எண்ணெய் கழிவுகள் வருகிறதா என வல்லுநர் குழு ஆய்வு: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ennore estuary ,Thiruvottiyur ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...