×

குன்றத்தூர் பிரதான சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு: அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குன்றத்தூர்: குன்றத்தூர் பிரதான சாலையோரத்தில், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிகளவில் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு, குவிந்து கிடக்கும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த வழியே சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், தங்களது மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலையே உள்ளது.

மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித்திரியும் மாடு, நாய் போன்ற விலங்குகள் உணவுகளை தேடி வருவதால், சாலையெங்கும் குப்பைகள் சிதறி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அமைந்துள்ளது. இவ்வாறு பொதுமக்கள் அதிகம் புலங்கும் இடத்தின் அருகே இதுபோன்று மலைபோல் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், கொடிய நோய்கள் பரவும் அச்சத்தில் பகுதி வாசிகள் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 4ம்தேதி மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து ஓய்ந்த நிலையில், தற்போது சென்னை எங்கும் மக்களுக்கு நிமோனியா மற்றும் வைரஸ் போன்ற காய்ச்சல்கள் பரவ தொடங்கி உள்ளன. இதனால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசு பல்வேறு கட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இதற்கு சற்று விதிவிலக்காக குன்றத்துார் நகராட்சி நிர்வாகம் மட்டும் மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி குப்பை விவாதத்தில் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்று இதே இடத்தில் குன்றத்தூர் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை குவித்து வைத்ததற்கு, பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து பல மாதங்களாக இங்கு குப்பை கொட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் குன்றத்துார் நகராட்சி நிர்வாகமே இவ்வாறு அலட்சியமாக குப்பைகளை கொட்டி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், உடனடியாக தலையிட்டு மீண்டும் இதுபோன்று குன்றத்தூர் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக சாலையோரம் குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post குன்றத்தூர் பிரதான சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு: அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kunradhur ,Kunradthur ,Kundrathur ,Dinakaran ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை